அதிமுகவில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து மீண்டும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருந்த நிர்வாகிகள் மீண்டும் அணி திரள்வது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சென்னையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்தில் கடந்த 3 நாட்களாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த 3 நாள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட சுமார் 25 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு அரசியல் பரபரப்பு செய்தி வெளியாகி கட்சியில் மூளும் பிளவை உறுதிப்படுத்தியுள்ளது. அதிமுக 1972-ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. வருகின்ற அக்டோபர் 17 அன்று அதிமுக தொடங்கி 55-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 55வது தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விழாவை புறக்கணிக்க எஸ்.பி.வேலுமணி மற்றும் CV ஷண்முகம் தரப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக ஆலோசனை நடத்திய எஸ்.பி.வேலுமணி தரப்பு இந்த முடிவை ஆலோசித்து எடுக்கவும் கூறப்படுகிறது. வரும் 15ம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இந்த கூட்டங்கள் நடைபெறும் என தலைமை அறிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் MLA-களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உட்கட்சி பூசல் இப்போது வெடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2026 பொது தேர்தலின் அதிமுக மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 2 MLA-களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து, தவெக- வில் இணைந்தனர். பின்னர் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த முடிவு அதிமுகவுக்குள் தலைமையின் முடிவுகள் மற்றும் நிர்வாகம் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, கட்சி வெற்றி பெற்றிருந்த தொகுதிகளிலேயே வாக்காளர்களின் ஆதரவைத் தக்க வைக்க முடியாத நிலை, நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொது தேர்தலில் மூன்றாவது இடம், 6 அதிமுக MLA-கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெக வில் இணைந்தது மற்றும் இடைத்தேர்தல் தோல்வி ஆகியவை கட்சியில் பல்வேறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொது தேர்தலில் 47 இடங்களை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தேர்தலுக்கு பின் இரு பிரிவுகளாக பிரிந்தது. எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் ஒரு தரப்பும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு தரப்பும் என உட்கட்சியில் இரு அணிகளாக செயல்பட்டது. அதையடுத்து கட்சியின் பல்வேறு புதிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகளின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உட்கட்சி மோதலை மேலும் அதிகரித்தது.
இதற்கு முக்கிய காரணமாக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-கட்சிக்கு ஆதரவாக சி.வி. சண்முகம் தரப்பு MLA-க்கள் ஆதரவு அளித்தது தான் என்று சொல்லப்பட்டது. அதையடுத்து இதில் சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆதரவாளர்கள், அதிமுக தலைமையான எடப்பாடி பழனிசாமியிடம் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுத்ததாக சொல்லபட்டது.
பின்னர் தொடர்ந்து SP வேலுமணி, CV சண்முகம் தரப்பு எடப்பாடி பழனிசாமி குறித்து எதிர்கருத்துக்ளை பொது வெளியில் பதிவு செய்துவந்தனர். தொடர் தோல்விக்கு காரணம் EPS தான் என்றும் அதற்கான காரணத்தை தலைமை கணிக்க தவறிவிட்டது என்றும் தொடர்ந்து அதிருப்தி மனநிலையிலேயே பேசி வந்தனர்.
இதில் மேலும் ஒரு திருப்பமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய பேசியிருந்தார். அக்கட்சி “யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக” மாறிவிட்டதாக விமர்சித்த அவர், “மிக விரைவில் அதிமுகவில் இருந்து 15 பேர் வெளியே வர இருக்கிறார்கள். நேற்று கூட அவர்கள் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்” என்று கூறினார். எனினும், அந்த 15 பேர் யார் என்பது குறித்து அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து 3 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடத்தியது SP வேலுமணி, CV சண்முகம் அணியினர் தான், அவர்களை தான் குறிப்பிடுகிறாரா..? அல்லது வேறு அணி உருவாகுமா? என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் மூண்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்