

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு மின்வெட்டு பிரச்சினை புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என தவெக உறுதியளித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்த புகார்கள் எழத் தொடங்கின. இதற்கிடையே, மின் தேவை அதிகரிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். இதனைச் சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியான தடையற்ற மின்சாரத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் சவால்களும், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் தேவையை சமாளிக்க, தனியாரிடமிருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.35 என்ற விலையில் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது வரலாற்றிலேயே மிகவும் அதிக கட்டணம் என்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் தொழில்துறை அமைச்சர், அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்துள்ளார். ₹5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் TVK அரசின் நிர்வாகம்! தேர்தலுக்கு பின் பதவியேற்ற TVK அரசு 2026 மே 23ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்! அதே TVK அரசு 2026 ஜூன் 25ல், நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது.
ஆனால் 2026 அக்டோபர் 12 ல், ஒரு யூனிட் ₹37 வரை கொடுத்து அவசர கதியில் மின் கொள்முதல்! திமுக ஆட்சியில் வெறும் ₹5.40 முதல் ₹9.50 வரை ஒப்புதல் பெற்ற மின் கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?
செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ₹16 முதல் ₹20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது. தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா?
தலைவர் MK ஸ்டாலின் அவர்களின் திறமையான திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன! இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு?
மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை! தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்! மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்? மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட முடியுமா? என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்தால், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு மின்வாரியம் ரூ.2.47 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவித்து வருவதாகவும், வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாகச் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதிக விலைக்கு 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதால் கூடுதலாக ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும், இதனால் தமிழ்நாடு மின்வாரியம் இன்னும் ஓராண்டுகூட செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்