தமிழ்நாடு

“உதயநிதி போதும் திமுகவை அழிப்பதற்கு” - எதிர்க்கட்சி தலைவரை கடுமையாக சாடிய அமைச்சர் ஆதவ்! அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரம்

1967-இல் அண்ணா மக்களாட்சியைக் கொண்டுவந்தார். அதற்குப் பிறகு கலைஞர் குடும்ப ஆட்சியையும் மன்னராட்சியையும் கொண்டுவந்தார்.

Muthu Lakshmi

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரமானது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தல் பலமுனை போட்டியாக மாறியுள்ள நிலையில் பரப்புரைகள் அனல் பறக்கிறது. அக்டோபர் 6 தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தீவிர பிரச்சாரத்தை தொடக்கியுள்ளது அரசியல் கட்சிகள். மேலும் தேர்தல் தொகுதி மக்களிடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது பதவிகளை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். மீண்டும் அதே தொகுதியில் தவெக வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து தேர்தல் மேலாண்மை பொறுப்பாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரக் கூட்டத்தில் திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தார்.

ஆரம்பத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியுமா? பூத்திற்குள் செல்ல முடியுமா? பணபலமும் ரவுடி பலமும் கொண்ட திமுகவை எதிர்த்து நிற்க முடியுமா? என்ற அச்சத்துடனேயே களம் புகுந்ததாக குறிப்பிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எந்தவித பணபலமும் இல்லாமல் தாய்மார்கள், அக்கா தங்கச்சிகள் மற்றும் பொதுமக்கள் போட்ட ஓட்டுகளால் தற்போது ஜெயித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று சொன்ன திமுகவை எதிர்க்கட்சியில் போய் உட்கார வைக்கும் நிலையை மக்கள் உருவாக்கினார்கள்” என்று பேசினார். மேலும் நம்மை சாதாரணமாக நினைத்து விட்டார்கள் இவர்களுக்கு விசில் அடிக்க மட்டும்தான் தெரியும் என்று நினைத்தார்கள், கடைசியில் அந்த விசிலே சின்னமாக வந்து மொத்தமாக விசில் அடித்துவிட்டு போய்விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மதுராந்தகத்தில் எழும்பும் இந்த சவுண்டு தாராபுரத்தில் கேட்க வேண்டும் என்றும் இரண்டு தொகுதிகளிலும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திமுக மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசுகையில் தாராபுரத்தில் நேற்று பேசிய உதயநிதி. நம் அண்ணன் மக்களுக்காக சட்டசபை கட்ட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் சட்டமன்றத்தில் தலையைச் சொறிந்து கொண்டு ஓடிய காலம் வேறு.. இப்போது தலையைச் சொறிந்து கொண்டிருப்பது மட்டுமே தெரிகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும்போது பாட்டு பாடியவர்கள் இப்போது பாட்டு பாடுவதாக குறை சொல்கிறார்கள் என்றார்.

மேலும் பெண் வேட்பாளரை அருகில் வைத்துக்கொண்டு ஆபாசமாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அண்ணா வளர்த்த கட்சி, கலைஞர் பாதுகாத்த கட்சி, அடுத்து மு.க.ஸ்டாலின் வந்த ஐந்து வருடம் ஆட்சியோடு மக்கள் அவரை தூக்கி அடித்து விட்டார்கள். இப்போது இருப்பது உதயநிதி திமுக. உதயநிதி திமுகவிற்கு வாயில் வருவது ஆபாசம் மட்டுமே. இவரெல்லாம் எதிர்க்கட்சித் தலைவரா? திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று கலைஞர் முன்னாடி சொல்லுவார் இப்போது யாரும் அழிக்க வேண்டாம் மு.க.ஸ்டாலின் பிள்ளை உதயநிதியே போதும் திமுகவை அழிப்பதற்கு என்று சாடினார்.

தமிழ்நாட்டின் வரலாற்று அரசியலைக் குறிப்பிட்ட அமைச்சர், 1967-இல் அண்ணா மக்களாட்சியைக் கொண்டுவந்தார். அதற்குப் பிறகு கலைஞர் குடும்ப ஆட்சியையும் மன்னராட்சியையும் கொண்டுவந்தார். 50 ஆண்டுகள் கழித்து மு.க.ஸ்டாலின் நல்லது செய்வார் என மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்கள். ஆனால் அவருக்குத் தனது பிள்ளை உதயநிதி ஸ்டாலினை மீண்டும் மன்னனாக வேண்டும் என்ற கனவு தான் இருக்கிறது. இந்த மன்னராட்சியை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் தலைவர் தயாரானார். அவர்தான் நம் அண்ணன் விஜய்  தற்போது முதல்வர் என்று பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்