உதயநிதி 
தமிழ்நாடு

“உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்” - உயர்நீதிமன்றம் உத்தரவு!

விசாரணையை நாளை வரை நீட்டிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம்

Muthu Lakshmi

“உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்” என்றும், “விசாரணையை நாளை வரை நீட்டிக்கக் கூடாது” என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிந்த உடனே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல நடிகையை மறைமுகமாக குறிப்பிட்டு இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், உதயநிதியை இன்று விடுவிக்க வேண்டும் என்றும், விசாரணையை நாளை வரை நீட்டிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை முடிந்த உடனே அவரை விடுவிக்க வேண்டும் என்றும், அவரை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உத்தரவு நகலையும் இன்றே வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதியின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், அவரது பேச்சுக்கு எதிராகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் மாறி மாறி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது அரசியல் திசைதிருப்பும் நடவடிக்கை என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்தியதாக பெண்கள் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், "உதயநிதியை கைது செய்துள்ளோம். அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு விசாரணை நடத்தப்பட்ட பிறகு அவர் விடுவிக்கப்படுவார்" என்று காவல்துறையும் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.