தமிழகத்தில் கடந்த வாரத்தில் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருந்தது. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்” என பதிவிட்டிருந்தார். மேலும் அடுத்தடுத்து நடைபெற்ற குற்றச்சம்பவங்களுக்கு வலுவான கண்டனத்தையும் ஆளும் அரசை நோக்கி முன்வைத்திருந்தார்.
இந்த வாரத்திலும் அதேபோல் குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை குறிப்பிட்டு, முதலமைச்சர் ஜோசேப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக மீண்டும் கடும் கண்டனத்தையும், விஜயை நோக்கி பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். அதில், கடலூரில் மர்மமான முறையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, “கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றும், “இப்படி தொடர்ச்சியாக நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு என்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக அரசை “SofaModel” அரசு என விமர்சித்த அவர், “இந்த ‘SofaModel’ அரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல” என்றும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய திமுக அரசுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் நினைவுபடுத்திய அவர், “தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய் கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று தொடங்கவிருந்த “சிங்கப்பெண் பாதுகாப்புப் படை” திட்டம் தமிழக அரசால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதை குறிப்பிட்டு, “பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை கடைசி நேரத்தில் ரத்து செஞ்சு இருக்கீங்க” என்றும், “நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளி வச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட “பிங்க் பெட்ரோல்” திட்டத்தை திமுக அரசும் தொடர்ந்ததை குறிப்பிட்டு, “சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக, “நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir” எனவும் அவர் கலாய்த்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.