

தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவை பொறுப்புகளும் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, முதல்வர் விஜய் காவல்துறை, உள்துறை மற்றும் பொது நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய துறைகளை நேரடியாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொலை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்த அச்சங்கள் அதிகரித்து வருவது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக நடந்துவரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சூழலில், எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை; காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளதாக”ஆளும் அரசை குற்றம் சாட்டினார். அதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 17) காஞ்சிபுரம் படப்பை இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி தவெக அரசு மீது பழனிசாமி விமர்சனம் தெரிவித்தார். அதில், “தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்” என கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு - பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதில் திமுகவைப் போல தவெக-வும் தோல்வி அடையக் கூடாது” என வேண்டுகோள் விடுத்தார்.
காஞ்சிபுரம் இரட்டை கொலை, தூத்துக்குடி மது தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலைய இளைஞர் ஒருவர் கொலை, சேலம் மாணவர் அடித்துக்கொலை ஆகிய போன்ற குற்ற சாட்டுகளை மேன்மைகொள் காட்டிய டிடிவி தினகரன், “அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளதாக” தெரிவித்தார். மேலும் முந்திய ஆட்சியிலும் குற்றங்கள் இருந்ததாவும், “தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளதாகவும்” தெரிவித்தார்.
எனவே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துவதாக பதிவில் குறிப்பிட்டிருந்தார் டிடிவி தினகரன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.