தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவாக.. களமிறங்கிய உதயநிதி! "இந்திய வரலாற்றிலேயே.. இப்படி ஒரு சம்பவம் இல்லை" - தவெக அரசுக்கு சரமாரி கேள்வி!

வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் 75 சதவீதம் பேர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்

Muthu Lakshmi

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாக எழுந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கில் உடனடியாக கைது செய்ய கோரியும் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும்  சென்னை டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் அளிக்க வந்துள்ளார். ஆனால் டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி இல்லை என்பதால் புகார் கொடுக்கவில்லை.

பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக, டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலைச் சந்தித்து புகார் மனு அளிக்க வந்தோம். ஆனால், டிஜிபி அலுவலகத்தில் அவர் இல்லை. அவர் எங்கே என்று கேட்டபோது, சிங்கப்பெண் படையின் பயிற்சிக்காக சென்றுள்ளதாகத் தெரிவித்தனர். எங்களுடைய கேள்வி, இந்த சிங்கப்பெண் படை எங்கே இருக்கிறது? அவர்களுக்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது? அவர்களுடைய பணி என்ன? என்பதுதான். அனைவரும் மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும். யாராவது இந்த சிங்கப்பெண் படையைப் பார்த்திருக்கிறோமா?

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. சட்டப்பேரவையில் அனைத்து தரவுகளுடன் எத்தனை கொலைகள் எத்தனை பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்துள்ளன என்பது குறித்து நான் பேசினேன். கடந்த மாதங்களில், பல கேள்விகளை நான் கேட்டேன்.. எந்த பதிலும் இல்லை. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுகள், வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் 75 சதவீதம் பேர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் MLA விவகாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் இதுவரை இல்லை.

இதில் உச்சபட்சமாக சென்று, ஒரு மாவட்ட ஆட்சியருக்கே தவெக MLA அருள் விக்னேஷ், தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். இப்படி ஒரு கேவலமான சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய வரலாற்றிலேயே இல்லை. மேலும் குடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்கே சென்று தகராறு செய்துள்ளார். இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலாவது ஒரு மாவட்ட ஆட்சியருக்கு இப்படி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதா? நடுராத்திரியில் மாவட்ட ஆட்சியர் கதவு தட்டப்பட்டுள்ளதா? இந்த சம்பவம் ஜூலை மதமே நடந்துள்ளது. இந்த ஆட்சி ஹனிமூன் காலத்தில் இருக்கிறது என்று சொன்னோம். அதனால் 6 மாதம் கேள்வி கேட்க மாட்டோம் என்றோம்.. ஆனால் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் உண்மையிலேயே ஹனிமூன் காலம் என நினைத்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து திமுக பொது செயலாளர் கனிமொழி தான் முதலில் பேசினார். ஆனால் அமைச்சர்கள் தொடர்ந்து பொய் கூறி, இந்த விஷயத்தை மறைத்து வந்தார்கள். இந்த சம்பவம் ஜூலை மாதத்தில் நடந்தும், ஆட்சியர் புகார் அளித்தும் 116 நாட்களாக முதலமைச்சர் விஜய் ஏன் வாய் திறக்கவில்லை? நீதிமன்றத்திற்கு போனதால்தான் FIR பதிவு செய்துள்ளார்கள்; 116 நாட்களா தூங்கிட்டு இருந்தாரா முதலமைச்சர்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து அனைவரும் பேசி வருகிறோம். ஆனால் அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் சென்ற பிறகுதான் அவர் மீது வழக்கு பதிவு என்பது செய்யப்பட்டிருக்கிறது. குற்றத்தை மூடி மறைக்க முயற்சி செய்த தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமைச் செயலாளர் இந்த விவகாரத்தில் பேரம் பேசி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தலைமைச் செயலாளர் இந்த விவகாரத்தை முதலமைச்சரும் சொன்னாரா.. இல்லையா? அப்படி முதலமைச்சர் இடம் சொல்லி இருந்தால் முதலமைச்சர் ஏன் 116 நாட்களாக வாய் திறக்காமல் இருக்கிறார். புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய விவகாரத்தில் துணை சபாநாயகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கு முதலமைச்சரிடம் தான் இருக்கிறது 116 நாட்களாக இந்த அரசு  தூங்கு மூஞ்சு அரசாக உள்ளது.

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரை கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் கடந்த நான்கு மாதங்களாக இந்த குற்றத்தை மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.. ஆகவே முதலமைச்சர் மீதும், இந்த அரசு மீதும் எங்களுக்கு எந்த நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை உடனடியாக தாமாக முன்வந்து சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் “இது மாற்றம் அல்ல துர்நாற்றம் என மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் சரமாரியாக விமர்சித்திருந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்ய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், வழக்கில் தேவையான ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்