சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இன்று திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் அந்தக் கார்களைப் பெறப்போவதில்லை என அறிவித்த நிலையில், சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் எழுந்தது.
முதலில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சரே கூறி வருகிறார். எங்கள் கட்சியின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாகனங்களைப் பெறுவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும், அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பொருளாதாரச் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பின் கீழ் வாகனம் வழங்க வேண்டும் என்பதை இந்த அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்" எனப் பேசினார்.
"எதிர்க்கட்சி தலைவரிடம் இரண்டு மூன்று பங்களா இருக்கிறது, அதனால் அரசு தொடர்பாக கொடுக்க மாட்டேன்" என சொல்ல முடியுமா?
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஊரிலிருந்து வரும்போது பேருந்தில்தான் வந்து செல்கிறார்.
அவையில் எல்லோரும் சமம் என நினைப்பவர் முதலமைச்சர். அதுதான் அரசின் நடைமுறை. என்னிடம் கார் இருக்கிறது. எங்கள் பொதுச்செயலாளரிடம் கார் இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய பலரிடம் கார் இருக்கிறது. நாங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கான கார் வேண்டும் எனக் கேட்கப் போவதில்லை. அடிப்படையாக எல்லோருக்கும் இந்தப் புரிதல் இருக்கும். அரசியலாக நினைத்தால்தான் அரசியல்.
மன்னார்குடி எம்எல்ஏவிடம் நான்கு கார்கள் இருக்கின்றன. ஆனால், தன்னுடைய தனிப்பட்ட காரில் செல்வதைவிட, அரசு காரில் செல்வது மரியாதையானதாக இருக்கிறது என்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரிடம் இரண்டு, மூன்று வீடுகள் இருக்கின்றன. ஆனால், அவர் அரசு பங்களாவில் இருக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சரான என்னிடம், தனக்கு அரசின் பங்களா வேண்டும் என்று கடிதம் கொடுத்தார். இப்போது நாம், 'உங்களிடம் இரண்டு, மூன்று பங்களாக்கள் இருக்கின்றன; அதனால் அரசு பங்களா கொடுக்க மாட்டேன்' என்று சொல்ல முடியுமா?
அரசுக்கு ஒரு புரோட்டோகால் இருக்கிறது. அமைச்சர்களுக்குக் கார் கொடுக்கப்படுகிறது, வீடு கொடுக்கப்படுகிறது, நான்கு உதவியாளர்கள் வழங்கப்படுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீடு கிடையாது, உதவியாளர் கிடையாது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களைத் தேடிச் செல்ல வேண்டிய கடமை இருக்கிறது.
நீங்கள் உங்களுடைய தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், கார், வீடு இல்லை; கையில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே பணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களில் சொந்த வீடு இல்லாதவர்கள், கார் இல்லாதவர்கள் இருக்கிறார்கள். அதேபோல, மற்ற கட்சிகளிலும் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் மாரிமுத்து அண்ணனிடம் கார் கிடையாது.
அரசின் ஓர் அறிவிப்பு, இந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு என்று மட்டும் வராது. முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவான ஓர் அறிவிப்பை வழங்கியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு, ஏற்கனவே காலை கார் வைத்திருப்பவர்கள் அப்ளை செய்ய மாட்டார்கள். எல்லா கட்சியினுடைய நிலைப்பாடும் இதுதான். கார் என்பது ஆடம்பரம் கிடையாது. ஊழல் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிகவும் அவசியமான தேவை.
இதற்கு எதிராகப் பேசிய கே.என். நேரு, “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் அமைச்சர் அந்தஸ்தில் இருக்கிறார். அரசு வீடு பெற்றுக்கொள்வது அவரது உரிமை. நாங்கள் கார் வேண்டும் என்று கேட்கவில்லை.
பத்தாயிரம் ரூபாய்தான் பணம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். எங்களிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கொடுக்க முடியும். இது தவறாக இருந்தால், எங்கள் மீது புகார் கொடுங்கள். கேஸ் போடுங்கள்.
இப்போது அமைச்சர் சொந்த வீட்டில் இருந்தாலும், அரசு அதற்கு வாடகை செலுத்துகிறது. முடிந்தால் அந்த வாடகை வேண்டாம் என்று எழுதிக் கொடுங்கள்” என்றார்.
இதற்குப் பிறகு பேசிய ஆதவ் அர்ஜுனா, “எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, இந்த விஷயத்தை அரசியலாக மாற்றுவது போலத் தோன்றியது. அரசின் நிதிச் சுமை என்பதையெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசினார். அரசின் நிதிச் சுமை எங்களுக்கு தெரியாதது போலவும், ஆடம்பரத்திற்காகக் கார் கொடுக்கப்படுவது போலவும் இருக்கிறது.
அமைச்சர்களுக்கு இருக்கும் உரிமைகளை நாங்கள் தவறாகச் சொல்லவில்லை. பங்களா கொடுத்தால்தான் மக்களைச் சந்திக்க முடியும். அதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது.
பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துவிட்டு, ரேஞ்ச் ரோவர் காரில் செல்லக்கூடிய எம்எல்ஏக்கள் இங்கு கிடையாது” என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய ராமச்சந்திரன், “கார் தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பேசிய கணேஷ் குமார், “சட்டமன்ற உறுப்பினர் பல உள்ளாட்சிகளுக்குச் செல்ல வேண்டும். கிராமங்களுக்குச் செல்வதற்கு கார் மிக அவசியம்தான். எங்களுடைய கட்சியிலேயே பொருளாதாரத்தில் நலிவடைந்த இரண்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள்கூட பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் கார் வழங்கலாம் என்பதே எங்களுடைய நிலைப்பாடு” என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்