"சட்டப்பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா?" எதிர்க்கட்சி தலைவர் பேச்சால் கடும் அமளி! தவெக-விற்கு 'ஓபன் சேலஞ்' விடுத்த உதயநிதி

"சினிமாவில் பேசும் பன்ச் டயலாக்களை சட்டப்பேரவையில் பேசவேண்டாம்" என்றும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.
Udhayanidhi Assembly speech
Udhayanidhi Assembly speech
Published on
Updated on
2 min read

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அவையை நோக்கி "இது சட்டமன்றமா? அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? "என்ற கேள்வியை அவைத்தலைவரை நோக்கி வைத்தார். மேலும், சினிமாவில் வருவது போல் 'பன்ச்' டயலாக் பேசுவதாக கூறியநிலையில் அவையில் அமளி எழுந்தது.

மேலும், ஏற்கனவே மூத்த சட்டமன்ற உறுப்பினர் அவைத்தலைவரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தாலும் மீண்டும் கவனத்திற்கு கொண்டுவருவதாக கூறி பேச தொடங்கினார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். அவ்வப்போது தங்களுக்கும் பேச அனுமதியளித்ததற்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், தங்களை விட அதிகமாக பேச ஆளுங்கட்சி சார்ந்தவர்களுக்கு நேரம் தருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஆளுங்கட்சியை சேர்த்தவர்கள் பேசும்போது ஆதாரமில்லாமல் பல குற்றசாட்டுகளை வைத்ததாகவும், ஆனால் அதை அவைத்தலைவர் அவைகுறிப்பில் இருந்து நீக்கிவிடுவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை விட ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பேசுவதைத்தான் அவைகுறிப்பில் இருந்து அதிகம் நீக்குவதாகவும் அந்த வரலாறை அவைத்தலைவர் படைத்ததாகவும் தெரிவித்தார் எதிர்க்கட்சித்தலைவர்.

அவைநிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்படுகிறது. கேள்விகள் கேட்டால், ஆச்சர்யப்படும் அளவிற்கும், அதிசயப்படும் அளவிற்கும் பதில்களை ஆளும்கட்சி அமைச்சர்கள் கொடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கேள்விகேட்டால் பதில் கூறலாம், அனால் இப்போது அவையில் பாட்டெல்லாம் படுவதாகவும் சுட்டிக்காட்டினார். "சிலநேரங்களில் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா? அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா?" என்று சந்தேகப்படும் அளவிற்கு தற்போது பாட்டு கச்சேரிகள் நடப்பதாக அவர் கூறினார். அதை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுவதாக அவைத்தலைவர் தெரிவித்தார். ஆனால், இவை அனைத்தும் நேரலையாக செல்வதால் யூட்டியூப் சேனல்களிலும், சமூக வலைத்தளத்திலும் 'ரீல்ஸாக கட்' செய்யப்பட்டு அதிகமாக 'ஷார்' செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.

அதனால் அவைத்தலைவர் நீக்குவதில் அர்த்தம் இல்லாமல் போய் விடுவதாகவும் அவர் கூறினார். மேலும், "நேற்று முன்தினம், பேரவையில் முதல்வர் பேசுகின்றபோது தனது மேசையில் 3 கோப்புகள் இருப்பதாக அவர் கூறியதாகவும் அதை திறந்து பார்க்க வைக்கவேண்டாம்" என்று முதல்வர் கூறியதையும் தங்களுடைய அரசை குற்றம்சாட்டும் தொனியில் முதல்வர் பேசியதாக சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் பேசினார். அந்த கோப்புகளை திறந்து பார்க்குமாறும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மேலும், எதற்காக பயப்படுகிறார்கள்? எதற்காக காலம் தாழ்த்துகிறார்கள்? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். மேலும், இதையே கடந்த 3 மாதங்களாக இதையே கூறுவதாகவும், "ஜோசியகாரன் சொன்னால்தான் அந்த ஃபைல்ஸை திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் எதுவும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று சரமாரி கேள்விகளை எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் எழுந்து பேசினர். இந்த தேர்தலில் 'தவெக' என்றால் என்னவென்று காட்டியுள்ளதாகவும், தங்களுக்கு பயம் இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதலமைச்சர் கூற வந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், "ஏன் கடந்த ஆட்சியில் சட்டப்பேரவையை நேரலையில் ஒளிபரப்பவில்லை?" என்ற கேள்வியையும் முன்வைத்தார். இவரையடுத்து பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், குடும்பமாக சட்டப்பேரவையை நேரலையில் பார்ப்பதாக ஒரு முதியவர் கூறியதாக குறிப்பிட்டார். இது குறித்து, பேசிய அவைத்தலைவர், பேசும்போது, "அவையில் பேசுவதை ஒட்டி பாடுவதில் எந்தவித தவறும் இல்லை" என்று கூறியதோடும், "முதல்வர் சுயமாக முடிவெடுக்க கூடியவர்" என்பதை இந்த 3 மாத காலத்தில் அனைவரும் பார்த்துள்ளதாகவும், கோப்புகள் அவரது ஆய்வில் இருப்பதாகவும் அதனை சவாலாக கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவைத்தலைவர் பேசினார்.

இதனால், அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. மேலும், இதனையடுத்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "ஜோசியம் என்று கூறினார்.. ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை தமிழ்நாடு பார்த்துள்ளது" என்று குறிப்பிட்டார். இவர்களுக்கு பிறகு பேசிய எதிர்கட்சித்தலைவர் "இதைத்தான் கூறினேன்.. நாங்கள் கேள்வி கேட்டால் ஆச்சர்யப்படும் அளவிற்கு, அதிசயப்படுமளவிற்கு ஒரு பதிலை கூறுவார்கள்" என்று கூறினார். "ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தை இல்லை. அவரை பதவியில் நியமித்து நீக்கியுள்ளீர்கள்" என்று கூறினார். முதல்முதலாக கேள்வி நேரத்தை ஒளிபரப்பியது திமுக ஆட்சியில்தான் என்பதையும் குறிப்பிட்டார். இதன் பிறகு அவையில் கடும் அமளி ஏற்பட்டது. "தற்போது நேரலை செய்வதில் என்ன என்ன பிரச்சனை வருகிறது" என்பதை மட்டும்தான் குறிப்பிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். மேலும், கோப்புகள் குறித்து பேசிய அவர், தான் 'ஓபன் சலென்ஜ்' செய்வதாகவும் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும், "சினிமாவில் பேசும் பன்ச் டயலாக்களை சட்டப்பேரவையில் பேசவேண்டாம்" என்றும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com