காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை தொடர்பான சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் அணுகுமுறை, கர்நாடக அரசின் நிலைப்பாடு மற்றும் ஒன்றிய அரசின் பங்கு குறித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், காவிரி பிரச்சனைக்கு மாநில அரசுகள் மட்டுமே தீர்வு காண முடியாது என்றும், ஒன்றிய அரசு நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று திருநெல்வேலி வந்தார். முன்னதாக, திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது, “கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே சட்டரீதியான வழிமுறையாகும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விரைவில் ஆலோசித்து அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி பிரச்சனையில் ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார். மேலும் “கடந்த 1974 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் நழுவிவிட்டன. மேலும், 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கே 2013 வரை உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலம் சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும், சட்டபூர்வமாக உச்சநீதிமன்ற மூலமாக தான் அணுக முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் "கர்நாடகாவில் உங்கள் தோழமை கட்சியான காங்கிரஸ் தானே உள்ளது, சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தலாமே, ஏன் முதல்வரை வர வேண்டாம் என்று தெரிவிக்கிறார்கள்" என்றும் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் நிர்மல் குமார், "ஒன்றிய அரசு தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்" என்றும் "உச்சநீதிமன்றம் தான் தீர்வு என்றும்" பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இன்டெர் ஸ்டேட் பிரச்சனையில் மாநிலங்கள் எதுவும் செய்ய முடியாது.. மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் 70 வருடமாக இந்த பிரச்சனை நீண்டு வருகிறது என்றும் "யார் ஆட்சியில் இருந்தாலும் தண்ணீர் தருவதில்லை" விரைவில் தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்போம், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். "காவிரி நீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது குறித்து முதல்வர் முடிவெருப்பார்" என்றும் குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்