“என்ன EGO…? அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதில் ஏன் தயக்கம்?” - அரசுக்கு அன்புமணி காட்டமான கேள்வி!

"தண்ணீர் இல்லை" என்று கூறி கர்நாடக அரசு உத்தரவை ஏற்க மறுப்பதாக குற்றம்சாட்டினார்
அன்புமணி ராமதாஸ்
Published on
Updated on
2 min read

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, மேகதாது அணை விவகாரம், காவிரி நீர் பிரச்சினை மற்றும் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும், அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளில் மொத்தம் 68 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் இருப்பதாக குறிப்பிட்ட அன்புமணி, கடந்த 20 நாட்களில் காவிரி நடுவர் மன்றம் இருமுறை தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், "தண்ணீர் இல்லை" என்று கூறி கர்நாடக அரசு உத்தரவை ஏற்க மறுப்பதாக குற்றம்சாட்டினார். ஒன்றிய அரசு, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளையே கர்நாடக அரசு மதிக்காத நிலையில், அந்த அரசைச் சந்தித்து பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், காவிரியில் போதுமான நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை என்றும், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என்பது கூட கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, கர்நாடகாவை நீர் திறக்க வைக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் தான் எழுப்பிய கேள்விகளுக்கு, மேகதாது அணைக்கு இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், திட்டத்தின் DPR திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு பதிலளித்திருப்பதாக அன்புமணி தெரிவித்தார். இதனால் சட்டரீதியாக தமிழகத்திற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேகதாது அணை விவகாரம் தவெகவின் பிரச்சினை அல்ல; அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமை தொடர்பான பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? "அரசுக்கு என்ன ஈகோ?" என்று கேள்வி எழுப்பிய அவர், வெறும் தீர்மானங்கள் நிறைவேற்றுவது மட்டுமின்றி, தமிழக அமைச்சர்கள் நேரடியாக ஒன்றிய அமைச்சர்களைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதலமைச்சர்கள் இடையிலான சந்திப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ரகசியமாக என்ன பேசப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார். தமிழக அரசு பின்வாசல் வழியாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற சந்தேகமும் இருப்பதாகக் கூறிய அவர், முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்றால் தண்ணீர் திறந்துவிடுவார்கள் அல்லது மேகதாது அணையை கைவிடுவார்கள் என்று நினைப்பது தவறான கணிப்பு என்றும் தெரிவித்தார்.

தற்போது கர்நாடக அரசில் முக்கிய பொறுப்பில் உள்ள டி.கே. சிவக்குமார், அரசியல் மற்றும் தேர்தல் காரணங்களுக்காக மேகதாது அணையை கட்டியே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறிய அன்புமணி, அந்த அரசியல் வியூகத்தில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்தார்.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசை தான் வெளிப்படையாக விமர்சித்து வருவதாகவும், காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரத்தில் செயல்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். அந்தமான் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்க்கும் ராகுல் காந்தி, மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை ஏன் எதிர்க்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கூட்டுறவு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான காவிரி நீரை உறுதி செய்வதே தமிழக அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டும் முயற்சியை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com