தமிழ்நாடு

“பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கூச்சல்”- ஆளுநர் அறிவிப்பால் அதிர்ந்த அரங்கம்! அமைச்சர் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணமா?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Muthu Lakshmi

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் அதிருப்தியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் இராசேந்திர விசுவநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். முதற்கட்ட அறிவிப்பின்படி, 871 மாணவர்களுக்கு ஆளுநர் பட்டம் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 113 மாணவர்களுக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாக பட்டம் வழங்குவார் என பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக கல்வி பயின்று, தங்களது பட்டத்தைப் பெறுவதற்காக இந்த நாளை எதிர்பார்த்திருந்த நிலையில், தங்களுக்கு ஆளுநர் நேரடியாக பட்டம் வழங்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விழா நடைபெறும் அரங்கில் மாணவர்கள் கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாணவர்களின் தொடர் எதிர்ப்பால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே, பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக பாடப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் முதலாவதாக பாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஒருபுறம் ஆளுநர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே பட்டங்களை வழங்க உள்ளதாக கூறப்படுவதும், மறுபுறம் விழாவின் பாடல் வரிசை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையும் நிகழ்ச்சியில் பரபரப்பை அதிகரித்துள்ளது. ஆளுநர் விழா அரங்கிற்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பும் மாணவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவர்களின் போராட்டத்தால் ஆளுநரின் வருகையும் தாமதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்களின் கூச்சல் மற்றும் எதிர்ப்பால் விழா நடைபெறும் இடத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தற்போது மாணவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ஆளுநர் 871 மாணவர்களுக்கும் ஆளுநர் அர்லேகர் பட்டம் வழங்கவுள்ளார் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.