"தவெக மக்களுக்கான ஆட்சியா? கார்ப்பரேட்களுக்கானதா?" - 'ஸ்டெர்லைட்' போல் போராட்டம் வெடிக்கும் என உப்பள தொழிலாளர்கள் எச்சரிக்கை!

தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியா? கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியா? என்ற சூழல் நிலவுகிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Thoothukudi protest
Thoothukudi protest
Published on
Updated on
2 min read

கடந்த திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி முள்ளக்காடு, முத்தையாபுரம், பழைய காயல், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்களின் இடங்களை கையகப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறு குறு உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் என திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதைத்தொடர்ந்து தற்போது பாதிக்கப்பட்ட கோவளம், பசுவந்தரை பண்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோரை சந்தித்து கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சென்னையில் ஒருமுறை தொழிலாளர்களை சந்தித்தார் என்றும் ஆனால் மீண்டும் உப்பு உற்பத்தியாளர்களை பார்ப்பதை தவிர்த்து வருவதாகவும் தொழிலாளர்கள் சார்பில் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று தமிழக அரசு சிப்காட் நிறுவனம் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள், உப்பள தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து உப்பு உற்பத்தியாளர் சிவாகர்செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பல தலைமுறைகளாக முத்தையாபுரம், முள்ளக்காடு, பொட்டல் காடு, புல்லா வெளி, பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்திதான் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 500க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் உள்ளனர் என்றும் ஆனால், தங்களின் வாழ்வாதாரத்தை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை தொழிலாளர்கள் சார்பில் நடத்தினோம் என்று அவர் கூறினார். இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழக அரசு பதவியேற்றுள்ளது. இந்த அரசு மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் அமைச்சர் கீர்த்தனா ஆகியோரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் சந்தித்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென தொழிலாளர்கள் சார்பில் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

தற்போது தமிழக முதல்வராக உள்ள விஜய் கடந்த திமுக ஆட்சியை மக்களுக்கான அரசா? மன்னராட்சி என்று கேட்டார். ஆனால் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியா? கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியா? என்ற சூழல் நிலவுகிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனவே கப்பல் கட்டும் தளத்தை வைப்பாறு போன்ற தரிசு நிலங்களில் அமைத்து அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுங்கள் என்றும் உப்பள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை அழித்து இங்கு அதை கொண்டு வருவதை ஏற்க மாட்டோம். மாற்று இடத்திற்கு கப்பல் கட்டும் தளத்தைக் கொண்டு செல்ல வேண்டும் இல்லை என்றால் ஸ்டெர்லைட் போராட்டம் போன்று மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com