தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் மிக வேகமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஓ. பன்னீர்செல்வம் அணியின் மிக முக்கியமான தளபதியாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், திடீரென அந்த அணியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். நீண்ட நாட்களாக ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவராகத் திகழ்ந்த வைத்திலிங்கம், தற்போது தனது அரசியல் பாதையை மாற்றிக் கொண்டது தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜனநாயக ரீதியாகச் செயல்படாமல் சர்வாதிகாரப் போக்கைக் கடைபிடித்து வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதே சமயம், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டிய அவர், மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களைச் செயல்படுத்துவதால் தமிழக மக்கள் முதல்வர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதனாலேயே தான் திமுகவில் இணைய முடிவு செய்ததாக அவர் விளக்கமளித்தார்.
ஓ. பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஏன் விலகினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஒரு முடிவை எடுப்பதில் ஓபிஎஸ் தரப்பில் அதிகக் காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறினார். சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் தாமதம் செய்ததே தான் அங்கிருந்து விலகக் காரணமாக அமைந்தது என்றார். மேலும், பாஜகவுடன் ஓபிஎஸ் பேசி வருவதால்தான் விலகினீர்களா என்ற கேள்விக்கு, அது போன்ற காரணங்கள் எதுவும் இல்லை என்று மறுத்தார். தொகுதி கேட்டு எதுவும் டிமாண்ட் செய்தீர்களா என்ற கேள்விக்கு, தான் எந்தவித நிபந்தனைகளும் இன்றி திமுகவில் இணைவதாகவும், எவ்வித டிமாண்ட்களும் வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு இனி என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, அது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று வைத்திலிங்கம் சுருக்கமாகப் பதிலளித்தார். தமிழக அரசியலில் ஓபிஎஸ்-க்கு வலது கரமாக இருந்த வைத்திலிங்கமே விலகியது அந்த அணிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. வரும் நாட்களில் அதிமுகவின் மேலும் சில முக்கியப் புள்ளிகள் திமுக அல்லது இபிஎஸ் அணியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். வைத்திலிங்கத்தின் இந்த அரசியல் அதிரடி, வரவிருக்கும் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.