தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசிக-விற்கு அமைச்சரவையில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது திருமாவளவன், தவெக அமைச்சரவையில் இணைவதா? என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "முன்பே கூறியிருந்தது போன்று அமைச்சரவையில் இடம்பெறுவது போன்ற கருத்து, உயர்நிலை குழுவில் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளரான ரவி குமார் அந்த கருத்தில் உறுதியாக இருந்தார். அதனால் 9ம் தேதி பகல் 12 மணியளவில் கூடிப் பேசினோம். இறுதியில் வெறும் ஆதரவினை மட்டுமே கொடுப்பது, அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்பதை முடிவெடுத்துதான் அறிவித்தோம்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இப்போது ஆதவ் அர்ஜுனா விசிக-விற்கும், ஐயூஎம்எல் கட்சிக்கும் வெளிப்படையாக ஒரு அழைப்பு விடுத்திருக்கிறார். அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகளும் பங்குகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், இது தனிப்பட்ட அவரது கருத்து இல்லை என்றும் இது முதலமைச்சரின் கருத்து என்றும் கூறியிருக்கிறார். இதற்காக மீண்டும் உயர்நிலை குழுவை கூடவேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ஆனால் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசவேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த அழைப்பை எப்படி எதிர்கொள்வது? என்கிற முடிவை அடிப்படையில் கலந்து பேசி விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் திருமாவளவன்.
மேலும், அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடம் தரப்படுமேயானால், விசிக-வின் ஆதரவினை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று முன்பு பதிவு செய்ததை குறிப்பிட்டார். ஆனால் அத்தகைய முயற்சி ஏதும் இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து ஒரு தரப்பினர் வெளியேறியுள்ள நிலையில், மவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், தற்போது வன்னி அரசிற்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்ற ஒரு தகவலும் பரவி வரும் நிலையில், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.