தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய், இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்குப் பயணம் செய்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பதற்கு முன்னர், கனக துர்கா அம்மன் கோயிலில் விஜய் வழிபாடு செய்துள்ளார்.
தனிவிமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டவர், மாலை 4 மணியளவில் கன்னாவரம் விமான நிலையத்தில் இறங்கினார். ஆந்திர அரசு சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தைச் சுற்றிலும் இருந்த ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டுக்கு இணையாக விஜயவாடா இளைஞர்களும் கூச்சலிட்டு கொண்டாட, விஜய் அவர்களை நோக்கிக் கையசைத்தார்.
இந்தப் பயணத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஆந்திர மாநிலக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். விமான நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கா அம்மன் கோயிலைச் சென்றடைந்தார் விஜய். அங்கு பக்தர்கள் மட்டுமல்லாமல், விஜய் வருவதை அறிந்த ஆண்கள், பெண்கள் எனப் பலரும் குவிந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நவராத்திரி என்பதால், அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பங்கேற்றார் விஜய். இந்தக் கோயிலில் வழிபாடு செய்வது வெற்றியைத் தரும் என நம்பப்படுகிறது.
விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு கனக துர்கா அம்மன் கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய்க்கு, கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
தரிசனம் முடிந்த பின்னர், கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, அவருக்கு அம்மனின் பட்டுவஸ்திரம், தீர்த்தப் பிரசாதங்கள் மற்றும் அம்மனின் திருவுருவப் படம் ஆகியவற்றை வழங்கிக் கௌரவித்தனர்.
கோயில் பூஜைகள், மேளதாளங்கள் மற்றும் ரசிகர்களின் உற்சாகக் கூச்சல் என, விஜய்யின் வருகையால் இந்திரகீலாத்ரி மலையே அதிர்ந்தது.
அடுத்ததாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விஜய் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பில் விஜய்யுடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் விஜய்க்கு கிடைத்துள்ள வரவேற்பு அந்த மாநில அரசியல் தலைவர்களை அதிரச் செய்துள்ளது. குறிப்பாக துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சினிமா நட்சத்திரமாக இருந்து அரசியலில் வென்றவர். அவருக்கு இணையான ரசிகர் கூட்டத்தை விஜய்யும் காட்டியிருப்பது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்