தமிழ்நாட்டுக்கு வரவேண்டியது 12 டிஎம்சி.. கிடைத்ததோ 2.25 டிஎம்சி! முதல்வர் விஜய் இன்று ஆந்திரா செல்வதன் பின்னணி என்ன?

சென்னையின் குடிநீர்த் தேவைக்காக, தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்துக்கு வழங்க இரு மாநிலங்களுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது.
CM Vijay's Andhra Pradesh Visit Today: Krishna River Water Dispute and Telugu Ganga Project Focus
தமிழ்நாட்டுக்கு வரவேண்டியது 12 டிஎம்சி.. கிடைத்ததோ 2.25 டிஎம்சி! முதல்வர் விஜய் இன்று ஆந்திரா செல்வதன் பின்னணி என்ன?
Published on: 
Updated on: 
1 min read

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பதற்காக இன்று விஜயவாடா புறப்படுகிறார் முதலமைச்சர் விஜய்.

இந்தப் பயணத்தில் மாலை 4:15 மணிக்குச் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கும் விஜய், இரு மாநில உறவுகள் தொடர்பான பல விஷயங்களை விவாதிக்க உள்ளார். அதில் மிக முக்கியமான ஒன்று கிருஷ்ணா நதிநீர் விவகாரம்.

சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் கிருஷ்ணா ஆறு முக்கியப் பங்காற்றுகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து இரு மாநில முதல்வர்களும் விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னையின் குடிநீர்த் தேவைக்காக, தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்துக்கு வழங்க இரு மாநிலங்களுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 4 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு உரிய அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு வெறும் 2.25 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சூழலில், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வரும் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஆந்திர மாநிலம் புதிய அணைகள் கட்டுவது, தமிழ்நாட்டுக்கு வரும் நீர்வரத்தைப் பாதிக்கும் என்ற அச்சம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முதல்வருடனான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, மாலை 6 மணியளவில் கனகதுர்கா கோயிலுக்குச் சென்று வழிபட உள்ளார் முதல்வர் விஜய். இரவு 8 மணிக்கு விஜயவாடா உத்சவ் 2.0 கலாச்சார நிகழ்ச்சியை ரசித்துவிட்டு, இரவில் சென்னை திரும்புகிறார்.

முன்னதாக, காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவுக்குச் சென்று அந்த மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது வருகைக்குக் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கர்நாடக முதல்வர் கேட்டுக்கொண்டதன்பேரில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay's Andhra Pradesh Visit Today: Krishna River Water Dispute and Telugu Ganga Project Focus
மின்துறை அமைச்சர் 'ராஜினாமா' செய்ய வேண்டுமா? நிர்மல் குமார் பதிவை தோண்டி எடுத்த செந்தில் பாலாஜி.. திமுக அரசுடன் ஒப்பிட்டு கேள்வி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com