cm Vijay Ajith Kumar Meeting 
தமிழ்நாடு

லண்டனில் நடிகர் அஜித்தை சந்திக்கிறாரா முதல்வர்? - நண்பரின் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்!

அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாராட்டு தெரிவித்திருந்தார்..

Mahalakshmi Somasundaram

தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்-அமைச்சர் விஜய் செப்டம்பர் 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், லண்டன் செல்லும் முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் செப்டம்பர் 11 மற்றும் 12-தேதிகளில் மிச்செலின் லீ மென்ஸ் கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதில் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய அணியும் பங்கேற்கிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணமும், அஜித்குமாரின் கார் பந்தயமும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

cm Vijay Ajith Kumar Meeting

மேலும், அஜித்குமாரின் கார் பந்தயத்தை விஜய் நேரில் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய் - அஜித் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருவதால், அவர்களது ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலமாக போட்டி நிலவி வருகிறது. ஆனால், இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவு இருக்கிறது. அதற்கு உதாரணமாக அஜித்குமாரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து வந்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டை உலகளவில் முக்கியமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக உருவாக்கும் நோக்கில் இந்த நகரம் அமைக்கப்படும் என்றும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதையும் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார்.

cm Vijay Ajith Kumar Meeting

முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாராட்டு தெரிவித்திருந்தார். அதில், தமிழ்நாட்டு இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியவை என தெரிவித்திருந்தார். இந்த சூழலில், லண்டன் பயணத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் சந்தித்துக் கொண்டால், அது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.