மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுக மற்றும் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், “டெல்லியில் இருக்கும் திமுகவுக்கு பேரு பாஜக.. தமிழ்நாட்டுல இருக்கும் பாஜகவுக்கு பெயர் திமுக” என பேசியது கவனம் பெற்றது. அப்போது பேசிய முதல்வர் விஜய், “முதலமைச்சராக நான் இங்கு வரவில்லை, உங்க வீட்டு பிள்ளையாக நான் இங்கு வந்திருக்கிறேன்.
அன்று ஜெயலலிதா மேடம் குறித்து ஸ்டாலின் சார் அவதூறாகப் பேசிய வீடியோ இன்றுவரை வைரலாகிக் கொண்டிருக்கிறது. அவர் மட்டும் இல்லை, அவரது வீட்டில் இருப்பவர்கள், அவரது கட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் இப்படித்தான் அவதூறாகப் பேசுகிறார்கள். இதையெல்லாம் மக்களாகிய நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
இப்படி திமுக பேச, அதற்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறது அதிமுக. ஜெயலலிதா மேடம் குறித்து தப்பாகப் பேசியவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டபோது, பலரின் முகமூடி கிழிந்துவிட்டது. அது கூடத் தெரியாமல் கூவிக்கொண்டிருக்கிறார்கள். யார் எப்படி போனால் நமக்கு என்ன.. உங்க சகோதரி, நம்ம சகோதரி மரகத குமரவேலுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.
நீங்கள் விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுவது பெண்களை அவதூறாகப் பேசுகிறவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனை. சட்டமன்றத்தில் ஊழல் என்றாலே ஆதாரம் கேட்கத் தொடங்குவார்கள். ஆதாரம் கொடுத்தால் அது கோர்ட்டில் வழக்கில் உள்ளது என்பார்கள். அதற்கு கோர்ட் பதில் சொல்லும் என்கிறார்கள்.
ஊழல் செய்த கூட்டத்தை விடமாட்டோம். இதுவரைக்கும் நாங்கள் ஊழலே செய்ததில்லை என உங்களால் சொல்ல முடியும். முதலமைச்சராக நான் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் போகிறேன். அதில் ஒரு பாலத்திற்கு சென்றிருந்தபோது, ‘நாங்கள் கட்டிய பாலத்தில் ரீல்ஸ் போடுகிறார்கள்’ என பதிவிட்டு இருந்தனர். எந்தப் பணத்தில் பாலம் கட்டினீர்கள்? உங்களிடம் பத்தாயிரம் மட்டும் தானே இருக்கிறது.. கார் கூட இல்லை.. இதை நான் கேட்கவில்லை, மக்கள் கேட்கிறீர்கள்.
வாக்குறுதி கொடுத்ததில் பாதியைத்தான் கொடுக்கிறார்கள் என்கிறார்கள். இலவச சிலிண்டர் ஆறு தானே கொடுக்கிறேன் என்று சொன்னார், ஆனால் 3 தான் கொடுக்கிறார் என மக்களை கேள்வி கேட்கச் சொல்கிறார்கள். ஆனால் மக்களோ, ‘நம்ம வீட்டு பிள்ளை விஜய் கொடுப்பார், நம்ம வீட்டு பிள்ளை விஜி கொடுப்பார்’ என்று கரியைப் பூசி அனுப்புகிறார்கள்.
பால் கொள்முதல் விலையை ஐந்து ஆண்டுகளில் உயர்த்துகிறோம் என்று சொன்னோம். ஆனால் மூன்று மாதத்தில் நிறைவேற்றியிருக்கிறோம். எதற்காக? நம்ம விவசாயிகளுக்காக. தீய சக்தியான திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பலர் முயன்றதால் ஏற்பட்ட மனவேதனையைத் தாங்க முடியாமல் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் மனதில் எவ்வளவு வலி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதே வலிதானே எம்ஜிஆர் தொண்டர்களுக்கும் இருக்கும். எம்ஜிஆர் தொண்டர்களே கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நான் இருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு திமுகவுதான் எதிரி. நம்ம தவெகவுக்கும் திமுகதான் எதிரி.
தொகுதி மறுவரையறை வந்துவிட்டால் திமுக ஆதரவு அளித்து மத்திய அரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் பாஜக உள்ளே வந்துவிடும் என பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால், இப்போது அந்த பாஜகவே திணறிவிட்டது. பாஜகவும் திமுகவும் வேறு வேறு இல்லை. தமிழ்நாட்டில் உள்ள பாஜகதான் திமுக.. டெல்லியில் உள்ள திமுகதான் பாஜக” என்று கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்