கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழக அரசின் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளது. மேலும் நேற்று பசுமை சாலையில் நீதிபதி தண்டபாணியை சந்தித்த தவெக -வினர் இந்த வழக்கை விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்றும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இன்று 2.30 மணியளவில் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக சார்பாக நீதிமன்றத்தில் என்ன கருத்துக்கள் முன் வைக்கப்படும், பாதிக்கப்பட்டவர்களை விஜய் நெறி சந்திக்க போகிறாரா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு தற்போது விஜய் தனது வீட்டை விட்டு வெளியே வந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க ஏற்கனவே விஜய்யின் நீலக்கரை வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்த முக்கிய முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.