நம்பிக்கை இல்லாத் தீர்மானம், இடைத்தேர்தல்.. அவசரமாக ஆதரவு கட்சி MLA-களை சந்திக்கும் விஜய்.. மீண்டும் நெருக்கம் காட்டும் இடதுசாரிகள்? AI Generated
தமிழ்நாடு

நம்பிக்கை இல்லாத் தீர்மானம், இடைத்தேர்தல்.. அவசரமாக ஆதரவு கட்சி MLA-களை சந்திக்கும் விஜய்.. மீண்டும் நெருக்கம் காட்டும் இடதுசாரிகள்?

ஒரு ஆட்சி 6 மாதம் கழித்த பிறகு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும் என்பதனால் அந்த பலபரீட்சைக்குத் தயாராகி வருகிறது தவெக.

Antony Ajay R

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்று ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார்.

கடந்த 2026 பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை மட்டுமே வென்றது. இது ஆட்சி அமைக்கப் போதுமானதாக இல்லை என்பதால், மறுதேர்தல் வருமா, திமுக - அதிமுக கூட்டணி அமையுமா என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன.

அந்தச் சூழலில் திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கி, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உதவின.

இதற்காக இந்தக் கட்சிகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மக்கள் தீர்ப்பை நிறைவேற்ற ஆதரவு வழங்கியதாகத் தெரிவித்தன.

ஆனால், ஆரம்பம் முதலே இடதுசாரிக் கட்சிகளுக்கும் தவெகவுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்துவந்தன. இந்த நிலையில், தவெக தலைமையில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியிலும் இடதுசாரிக் கட்சிகள் இடம்பெறவில்லை. இதனால், இப்போது முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டம், கூட்டணிக் கட்சிகளின் கூட்டமாக இல்லாமல் ஆதரவுக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமாக நடைபெறுகிறது.

மேலும், இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்ததுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான பிரச்சினைகளில் அரசை விமர்சித்துக் கருத்து தெரிவித்தன.

ஆனால், முதலமைச்சரின் முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆறு மாத கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது.

ஒரு ஆட்சி ஆறு மாதங்களைக் கடந்த பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும் என்பதால், அந்தப் பலப்பரீட்சைக்குத் தயாராகி வருகிறது தவெக. கடந்த நவம்பர் 11ஆம் தேதி சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்த விஜய், நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து எச்சரித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கிறார். இது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கான தயாரிப்பாகவும், கட்சிகளின் ஆதரவை உறுதிப்படுத்தும் நிகழ்வாகவும் இருக்கும் என்றே பலரும் கருதுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியின் நீண்ட நாள் பிரச்சனைகள் குறித்து முதலாமாச்சரிடம் மனு கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

ஆனால், இப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் தீவிரமடைந்து வருவதால், அது குறித்தும் ஆலோசிக்கவும், மேலும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்து விவாதிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தவெக ஆறு மாத கால ஆட்சியை நிறைவு செய்திருப்பதால், அதற்காக ஆதரவுக் கட்சிகளுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்