தமிழ்நாடு

“கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்” - உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் நிதியுதவி அறிவித்த தவெக தலைவர் விஜய்!

எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

Mahalakshmi Somasundaram

கரூரில் நடந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது, விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நேற்று தனது வலைத்தள பக்கத்தில் தமிழக வெற்றி கழக தலைவைர் விஜய் “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். முதலமைச்சர் அரசு சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண நிதியும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட உள்ளதை அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சமும் காயமடைந்தவர்களை குடும்பத்திற்கு 2 லட்சமும் நிதியுதவி அறிவித்து மீண்டும் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.