Vijay vs Udhayanidhi Vijay vs Udhayanidhi
தமிழ்நாடு

மாறி மாறி சமூகவலைத்தளத்தில் தாக்கும் முதல்வர் - எதிர்க்கட்சி தலைவர்! "அரதப் பழைய, புளித்துப்போன வாதம்" - 'சோஃபா மாடல்' என்று சாடி பதிவுகள்

தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் உதயநிதியின் காட்டமான விமர்சனத்திற்கு தனது X தளத்தின் மூலம் பதிலளித்துள்ளார்.

Vinvizhi Leninton

நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நிலையில், தவெக 144 என்ற பெரும்பான்மையை பெற்று வெற்றிபெற்றது. ஆனால், அதற்கு முன்பு திமுக சட்டமன்ற குழுத்தலைவர் உதயநிதி தவெக தலைவரும் முதல்வருமான விஜயை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். கேள்விகளை எழுப்பியதோடு மட்டுமின்றி கட்டமான விமர்சனங்களையும் முன்வைத்தார். அதன்பின்பு திமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் உதயநிதியின் காட்டமான விமர்சனத்திற்கு தனது X தளத்தின் மூலம் பதிலளித்துள்ளார். அதில் அவர், "சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று. பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு.

இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?. இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?. மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது.

ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி என்று மிக நீண்ட பதிவினை பதிவிட்டார் தவெக தலைவர் விஜய்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில், "பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!. நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?. 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!. திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! என்று அதற்கு பதில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவின் இறுதியில் 'சோஃபா மாடல்' என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.