

தமிழக அரசியலில் முக்கிய மாற்றமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கட்சியின் பல்வேறு புதிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன், சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகளின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி கண்டது. இதற்காக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்துக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு தரப்புகளாக பிரிந்து வந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானத்துடன், அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
ஒரு தரப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இருந்த நிலையில், மற்றொரு தரப்பில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு தரப்பு தனியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சி.வி. சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக அதிமுகவில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அதிமுகவில் உள்ள உட்கட்சிப் பிரச்சனையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
திமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது மேலும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. தனைத் தொடர்ந்து, தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், ஆர். காமராஜ், டாக்டர் சி. விஜயபாஸ்கர், பி. தங்கமணி, கே.பி. அன்பழகன் மற்றும் பா. பென்ஜமின் உள்ளிட்டோர் அவர்கள் வகித்து வந்த மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் நடவடிக்கை, அதிமுகவில் அடுத்த கட்ட அமைப்பு மாற்றங்களுக்கும், கட்சிக்குள் உருவாகி வரும் அதிகாரப் போட்டிக்கும் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.