"வாழ்க்கை ஒரு வட்டம்டா!.. பாஜக பிராஞ்ச்... திமுக கிளை கழகமாக மாறிவிட்டது" - விஜய் என்ன பேசினார்? 
தமிழ்நாடு

மதுராந்தகத்தில் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்த முதல்வர் விஜய்.. அப்படி என்ன பேசினார்? முழு உரை விவரம் இங்கே

"அவர்களது முகமூடி கிழிய தொடங்கிவிட்டது. அவர்கள் முகமூடி கிழிந்தது தெரியாமலே குதித்துக் கொண்டிருக்கிறார்கள்." - விஜய் பேச்சு

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி (Tollgate) அருகில் உள்ள மைதானத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த், வேட்பாளர் மரகதம் குமரவேலைத் தொடர்ந்து பேசினார் விஜய்.

அவர் பேசுகையில், "முதலமைச்சராக இங்கே வரவில்லை. எப்போதும்போல உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்கள் வீட்டு மகனாக, உங்கள் வீட்டு அண்ணனாக, தம்பியாக இங்கே வந்திருக்கிறேன்.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க வேண்டும். ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?

ஒரு தனி கட்சியா, சாமானியர்களின் கட்சியா, பெண்கள் பேராதரவுடன், இளைஞர்களின் குடும்பங்களின் ஆதரவுடன்... பெண்களின் பாதுகாப்பிற்காக, மிக முக்கியமாக லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?

ஓம் சக்தி பராசக்தி; திமுக ஒரு தீய சக்தி

ஏன் நம்மைப் பற்றி தொடர்ந்து அசிங்கமாக, ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்? எல்லா இடத்திலும் ஆபாச நதி தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

நான் சினிமாவில் ஜெயித்ததற்கும் இன்றைக்கும் அரசியலில் ஜெயித்ததற்கும் தமிழ்நாட்டு உறவுகள் தான் காரணம். அந்த உறவுகளால்தான் கட்சி ஆரம்பித்து வெறும் இரண்டரை வருடங்களுக்குள் 35 சதவீதம் வாக்கு வாங்கி வெற்றி பெற முடிந்தது?

அன்னைக்கு ஜெயலலிதா மேடமையை, ஸ்டாலின் சார் அவதூறாக பேசிய வீடியோ இன்னும் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் இப்படித்தான் பேசுகிறார்கள்.

இதையெல்லாம் மக்களாகிய நீங்கள் நுணுக்கமாக கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இப்படி திமுக ஒரு பக்கம் பேசிக் கொண்டிருந்தால், இவர்க்களுக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ணுவது மற்றும் பலர்.

மற்றும் பலர் யார் என்று தெரியுமா?

ஒரு மூன்று மாதம் டச் விட்டு போயிருப்பதால் திரும்பவும் சொல்கிறேன், அதிமுக.

ஜெயலலிதா மேடமையே தப்பா பேசியவர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஐடியா பண்ணும்போதே இந்த 'மற்றும் பலரின்' திட்டம் என்னவென்று எல்லாம் தெரிந்துபோய்விட்டது.

அப்போதே அவர்களது முகமூடி கிழிய தொடங்கிவிட்டது. அவர்கள் முகமூடி கிழிந்தது தெரியாமலே குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யார் என்ன கூவினாலும் நமக்கு என்ன?

நம்முடைய ரூட் ஒரே ரூட்தான், ஸ்ட்ரைட் ரூட்தான்.

அதனால், மதுராந்தகம் தொகுதி மக்களே, கிட்டத்தட்ட இந்த இடத்திலிருக்கும் நமது த.வெ.க. சார்பாக...

உங்கள் சகோதரி,

நம்ம வீட்டு பெண்ணுக்கு,

என் தங்கச்சி

மரகதம் குமரவேல் அவர்களுக்கு...

தயவுசெய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். நீங்கள் விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுவது இந்த பெண்களை அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசக்கூடிய ஒவ்வொருத்தருக்கும் கொடுக்கக்கூடிய தண்டனையாக இருக்கும்.

இந்த திமுகவுக்கோ அல்லது தீய சக்திக்கோ, ஆபாச சக்திக்கோ, மற்றும் பலருக்கோ நீங்கள் ஓட்டு போட்டீர்கள் என்றால், பெண்களை தப்பாக பேசுபவர்களை நீங்கள் ஆதரிப்பது போல ஆகிவிடும்.

நம்ம வீட்டு பெண்களை இதுபோல பேசுபவர்களை நீங்கள் சும்மா போகவிடக்கூடாது.

கேள்வி கேட்க வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றால், அண்ணா சொன்னார், அப்படி பார்த்தால் 108 சீட் வாங்கிய நாம் ஆட்சி அமைக்க வேண்டும். அது நடந்துவிடக்கூடாது என்று திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து ஒரு போரை செய்கிறார்கள், பாருங்கள்.

இந்த 'மற்றும் பலர்' பாஜகவினுடைய ஒரு பிராஞ்ச். இப்போது திமுகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டார்கள். இதை நான் சொல்லவில்லை, பெரிய பெரிய தலைவர்களே சொல்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை அனுபவம் அனுபவம் என்று சொல்லி மக்களின் காசை கொள்ளையடித்தவர்கள் ஆட்சிக்கு வரலாம். ஆனால், நம்மைப் போல சாதாரண குடும்பத்திலிருந்து சாமானியர்களின் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா?

ஏனென்றால், இங்கு விஜய்யோட ஆட்சி வந்துவிட்டால்... பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, அஞ்சலை அம்மாள் வழியில் விஜய்யின் ஆட்சி வந்துவிட்டால் ஊழல் செய்ய முடியாது. மக்கள் காசை தொட முடியாது.

தொக்கா மாட்டிக்கொள்வார்கள் எனத் தெரியும். அதனால் தான் இந்த ஆட்சி வரக்கூடாது என இரண்டு பேரும் மாறி மாறி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத்தான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டசபையில் சொன்னார்கள்.

மக்கள் காசை தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம்.

அதனால் தான் சட்டசபையில் அந்த காலத்திலிருந்து அவர்கள் செய்த ஊழலை எல்லாம் எடுத்து சொன்னோம்.

ஊழலின் மூத்த தந்தை யார் என்று இன்றைக்கு இருக்கிற ஜெனரேஷனுக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லவா? அதனால் அந்த காலத்து ஊழலை எடுத்துச் சொன்னால், எதிர்கட்சி திமுகவினர் கேட்கிறார்கள், "அப்போது விஜய் பிறக்கவே இல்லை?" என்று.

நான் எப்போது பிறந்தால் உங்களுக்கென்ன? வரலாறை எடுத்துப் படித்துப் பார்த்தால் உங்களுடைய வண்டவாளமும் தண்டவாளமும் தெரியப்போகிறது.

அதாவது, அசெம்பிளியில் ஒன்றை கவனித்தீர்களா?

ஊழல் என்று சொன்னால் உடனே "ஆதாரத்தை காட்டு" என்பார்கள்.

ஆதாரத்தை காட்டினால் "கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும்" என்பார்கள். அதற்கு மேலாக சொன்னால் "கோர்ட்டில் கேஸ் நிலுவையில் உள்ளது, அதைப்பற்றி இங்கு பேசக்கூடாது" என்பார்கள்.

நாங்கள் பேச ஆரம்பிக்கும் போதே "கோர்ட்டில் கேஸ் வழக்கு இருப்பதால் அதைப்பற்றி பேச முடியாது என எந்த வழக்கையும் சொல்லவில்லை." என சொல்லிவிட்டு தான் பேச ஆரம்பித்தேன். ஆனால், அவர்கள் எல்லாம் காதில் விரலை போட்டுக் கொண்டு "கத்து கத்து" என கத்திக் கொண்டிருக்கிறார்கள். எதுக்கு கத்துகிறார்கள், ஏன் கத்துகிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை.

நமக்கு அசெம்பிளிக்கு இதுதான் முதல் எக்ஸ்பீரியன்ஸ் வேற.

அவர்கள் கத்தும்போது நாம் பேசலாமா, கத்தி முடிக்கும் வரை காத்திருக்கவா என ஒரு குழப்பமான மனநிலையில் தான் இருப்பேன்.

அவர்களது இன்டென்ஷன் மட்டும் எனக்கு தெரிந்துவிட்டது, விஜய்யை பேசவிடக்கூடாது என்பதுதான்.

அவர்கள் "பேசு, பேசு, பேசு" எனச் சொல்வார்கள். பேச ஆரம்பித்தால்... அதாவது என் குரல் தான் மக்களை போய் ரீச் ஆக கூடாது என கத்துவார்கள்.

அதனால், நான் இங்கே காட்டுக்கத்து கத்த வேண்டியதாக இருக்கிறது.

அவங்களுக்கு என்னடா இந்த விஜய் 50 வருஷத்துக்கு முன்னாடி இருக்கிற ஊழலை எல்லாம் எடுத்துச் சொல்கிறானே.

இன்றைக்கு 50 வயதுக்கு உள்ளே இருப்பவர்களுக்கு இதைப் பற்றி தெரியாதே. இன்றைக்கு இருக்கிற ஜெனரேஷனுக்கு இதைப் பற்றி தெரியாதே.

நாம் இதை வைத்துதான் 'மிஸ்டர் கிளீன்' என்ற இமேஜை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இவன் பழைய கதையெல்லாம் சொல்கிறானே என்று நம்மைப் பற்றி அசிங்கமாக, அவதூறாக பேசுகிறார்கள். தெல்லாம் பத்தவில்லை. நிறைய எதிர்பார்க்கிறேன் என்றுதான் தோன்றுகிறது.

30, 34 வருஷமா இதெல்லாம் பார்த்துவிட்டு தான் இதெல்லாம் வந்திருக்கிறேன்.

ஸ்டாலின் சாருக்கும், திமுகவுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறோம். ஊழல் செய்த பணத்தை தொடவே மாட்டோம்.

இனிமேல் நீங்கள் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.

சர்க்காரிய கமிஷனில் சொன்னார்களே "அப்யூசிங் தேர் அஃபிஷியல் பொசிஷன்" (Abusing their official position) என்று, அதை நாங்கள் ஒருநாளும் செய்யமாட்டோம்.

நான் ஏற்கனவே கேட்டதைத்தான் திரும்பவும் கேட்கிறேன். இதற்கு முன்னாடி நாங்கள் மக்கள் காசை தொட்டதே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

இனிமேல் நாங்கள் மக்கள் காசை தொடவே மாட்டோம் என்று உங்களால் சொல்ல முடியுமா?

இதுவரைக்கும் நாங்கள் ஊழலே செய்யவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

அட்லீஸ்ட் இனிமேல் நாங்கள் ஊழலே செய்யமாட்டோம் என்றாவது உங்களால் சொல்ல முடியுமா?

அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி உங்களுடைய சொத்துக்கள் எவ்வளவு, அரசியலுக்கு வந்ததற்கு பிறகு உங்களுடைய சொத்துக்கள் எவ்வளவு எனக் காட்ட முடியுமா?

என்னைப் பார்த்து சிலர் கேட்கின்றனர் எதிர்க்கட்சித் தலைவராக கூட இல்லாத ஸ்டாலினை ஏன் விமரசிக்கிறேன் என்று. நம்முடைய கேள்வி எப்போதும் திமுக தலைமையை நோக்கி தான்.

இந்த தேர்தலில் இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே ஒன்று தூய சக்தி தவெக, மற்றொன்று தீய சக்தி திமுக.

இப்போது கவனித்தீர்களா அவர்களும் இதேயே சொல்லிவிட்டார்கள். திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே என்று.

அதான் வாழ்க்கை ஒரு வட்டம் டா

தேர்தலுக்கு முன்னாடி கணக்கு ஒன்று போட்டு இருக்கிறார்கள். அரித்மெடிக்ஸ் மேத்தமேடிக்ஸ் ஒன்றும் வேலைக்காகவில்லை. இப்போது இன்னொரு கணக்கு போட்டு இருக்கிறார்கள். எப்படி குறுக்கு வழியில் போய் இந்த ஆட்சியை கைப்பற்றலாம் என்று. சார் உங்கள் கணக்கு எல்லாம் ஒன்றுக்கும் உதவாத மன கணக்கு. எனக்கும் தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கும் இருக்கிறது அன்பு கணக்கு. இந்த அரசியல் ரகசியம் எல்லாவற்றையும் தாண்டி தாண்டிய பாசக் கணக்கு.

இந்த அதிமுக, திமுக, பிஜேபி ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைக்க மற்றும் பலர் பிளான் போட்டனர். ஒன்னும் கிழிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற பச்சை குழந்தை முதல் பாட்டி தாத்தா வரை அனைவரும் என்னுடைய சொந்தங்கள், என்னுடைய உறவுகள்.

நான் பதவி ஏற்ற அன்று கொஞ்சம் அவகாசம் கேட்டேன். கடன் மேல கடன் கடன் வாங்கி கஜானா நிலைமை மோசமாக இருக்கிறது, நிதி நிலைமை மோசமாக இருக்கிறது அப்படிப்பட்ட நிலைமையில தான் நான் பதவி ஏற்கிறேன். அதனால் கொஞ்சம் டைம் கேட்டேன். அப்ப கூட என்னால முடிந்த எல்லாத்தையும் செய்ய ட்ரை பண்ணிக்கொண்டு தான் இருந்தேன். ஆனால் "இப்போது விஜய் வந்து கடன் தான் வாங்குகிறார்" என விமர்சித்தனர். ஆமா நான் கடன் தான் வாங்குகிறேன். கொள்ளையடிக்க இல்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக.

கொடுத்த வாக்குறுதியில் கொஞ்சமாவது ஏதாவது செய்ய வேண்டும். 6 சிலிண்டர் கொடுக்கிறேன் என்று சொன்னேன். இப்போது இந்த நிலைமையில் என்னால் 3 தான் கொடுக்க முடிந்தது. அதை உடனே இம்ப்ளிமெண்ட் பண்ணுங்க என்று சொல்றேன். உடனே அதை, "6 கொடுக்கணும்னு சொன்னா 3 தான் கொடுத்து இருக்கிறார்கள். பாதி தான் கொடுக்கிறார்கள். மீதியை காணோம்." என மக்களை ஏற்றி விட்டு மக்கள் கிட்ட பேட்டி எடு என்கிறார்கள். ஆனால் மக்கள் "நம்ம புள்ள விஜய் கண்டிப்பா கொடுக்கும்" என சொல்லி மூஞ்சில் கரியை பூசிவிட்டார்கள்.

நம்ம மக்கள் பேராதரவோடு வெற்றிகண்ட நம்ம மக்கள் ஆதரவோடு அமைந்திருக்கின்ற மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி உதவியோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சிக்கு உரிமையாளர்கள் யார் தெரியுமா?

நீங்கள் தான்.

மக்கள் தான்.

அப்படிப்பட்ட மக்கள் அமைத்துக் கொடுத்த இந்த ஆட்சி கலைந்தது என்று சொன்னால், அவர்களுடைய கனவு தான் கலைந்துவிடும்.

திமுக, திமுகவினுடைய அமைப்புகளுக்கு வேலை செய்கின்ற எல்லாருக்கும் சொல்கிறோம்.

இந்த விஜயைத் தொடாதீர்கள். விஜய்யோடு இருக்கின்ற இந்த மக்களைத் தொடாதீர்கள்.

அப்புறம் என்ன இந்த விஜயைத் தொட்டோம், விஜய்யோடு இருக்கின்ற இந்த மக்களைத் தொட்டோம் என காலத்துக்கும் புலம்புவீர்கள்.

காஞ்சிபுரம் பேச்சு ஞாபகம் இருக்கா தேர்தலுக்கு முன்னாடி? மறந்துட்டீங்கன்னா போட்டுக் கேளுங்கள்.

அதனால் மக்களே, திமுகவும் பாஜகவும் மற்றும் பலரையும் ஆட்டம் காண வைக்க தயவுசெய்து (கையெடுத்துக் கும்பிட்டு ஆதரவைக் கேட்டார்)

விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.

நம்ம கட்சியை இன்னும் பலமாக ஆக்குவதற்கு தயவுசெய்து விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.

நம்ம மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளரான மரகதம் குமரவேல் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் எம்.எல்.ஏ.வாக ஆக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

அதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு, உங்க ஒரு ஓட்டைக் கூட வீணாக்காம, உங்க வீட்ல இருக்கிற எல்லா ஓட்டையும் உங்க விசில் சின்னத்திற்கே போடணும்.

இப்போது இங்கு செங்கல்பட்டு மதுராந்தகம் தொகுதியில் இருக்கின்ற சில பிரச்சனைகளைப் பற்றி பேசவேண்டும்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி பதவியேற்ற பிறகு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கீழ்க்கண்ட அறிவிப்புகள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன:

* செங்கல்பட்டு மாவட்டத்தில் வாடகைக்கட்டிடங்களில் இயங்கிவரும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான சமூகநீதி விடுதிகளுக்கு சொந்தக்கட்டிடங்கள் கட்டித்தர அறிவிக்கப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் உணவுத்தானியங்களைச் சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் சேமிப்புக் கிடங்கு கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.

* மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தாய்சேய் நலக்கட்டிடம், புதிய உயரடுக்கு அவசர சிகிச்சை கட்டடம், வெளிநோயாளி பிரிவு கட்டடம், மாணவர்கள் தங்கும் விடுதி, தாய் மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளது.

* செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஏரியிலுள்ள மதகின் ஐந்து பாசனக் கால்வாயை காங்கிரீட் கால்வாயாக 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் தொகுதியின் மக்கள் கோரிக்கைகள்: இந்த நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் சென்னை மாநகரை ஒட்டியுள்ள தொகுதியாக இருந்தும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்ற நிலை உள்ளது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் காப்பதற்காக பாலாற்றின் குறுக்கே உயர்மட்டத் தடுப்பணை அமைக்காமலும், ஏரிகளை, மாவட்டத்தின் சிறப்புப் பெற்ற ஏரிகளைப் புனரமைக்காமலும், கால்வாய்களைத் தூர்வாராமலும் சீரமைக்காமலும் வஞ்சித்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்மணிகளைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கொள்ளளவு கொண்ட குடோன்கள் அமைக்காமலும், மிகுந்த கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தாமலும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமலும் கடந்த ஆட்சியாளர்கள் இருந்தனர். அச்சரப்பாக்கம் சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தும் பெண்கல்விக்கு முக்கியத்துவம் தராமல் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவை இருந்தும், கடந்த ஆட்சியாளர்கள் அந்தக் கோரிக்கையைக் கணக்கில் கொள்ளவில்லை. கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி அரசு மேல்நிலைப் பள்ளி உருவாக்கப்படவில்லை. மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிலும் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படவில்லை. பல்வேறு பகுதிகளைப் பணிபுரியும் பெண்களுக்கும் தங்கும் விடுதி வசதிகள் செய்து தரப்படவில்லை.

இந்த பகுதி சென்னைக்கு அருகாமையில் இருந்தும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டமாக இருந்தும் குடியிருப்புகள் தேவை இருந்தும், முந்தைய ஆட்சியாளர்கள் வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் போதுமான அளவிற்கு கட்டித் தராமல் இருக்கும் நிலை உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மதுராந்தகம் ஏரியை சுற்றுலாத் தளமாக மேம்படுத்தவில்லை. தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் உங்களுடைய தேவையான அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் நேரடியாகத் தெரிந்துகொண்டேன்.

உங்களுடைய தேவைகள் எங்களுக்குப் புரிகிறது. மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக உங்களுடைய அரசு உள்ளது. உங்களுடைய தேவைகளை அறிந்து செயல்படும் அரசாங்கத்திற்கு உங்கள் பேராதரவை அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

என் மனதில் இருக்கிற பெரிய வேதனையான ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த திமுகவுக்கு என் மேல எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியலையே அப்படிங்கிற விரக்தியில, கடுப்புல ஒரு டேஞ்சரான ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

என் சொந்த தாயை, என்னை பெற்ற தாயை அவங்க தப்பா பேசும்போது கூட நான் பொறுத்துக் கொண்டேன்.

ஆனா, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், என் கூடவே துணையாக இருக்கிற எனக்கு தாய் அன்பு காட்டுகிற என்னுடைய தமிழ்நாட்டு பெண்களை அவர்கள் அசிங்கமாக பேசும்போதுதான்—திமுக தலைமையும் இந்த மாதிரி தான் பேசுறார்கள், திமுக குடும்பத்தில் இருப்பவர்களும் இந்த மாதிரி தான் பேசுகிறார்கள். இந்த பேச்சை பழக்க தோஷத்தில் ஸ்டாலின் சார் குடும்பத்தில் இருக்கிறவங்களும் உட்கார்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள்.

இனி இதை யாரும் பொறுத்துக் கொள்ள முடியாது.

இன்னொரு கொடுமையான விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன்.

தமிழ்நாட்டு இளம் பெண்களை, பச்சைக் குழந்தைகளை ஒருத்தன் இத்தனை வருடமாக சீரழித்துக் கொண்டிருந்திருக்கிறான்.

அந்த கேஸ் போன திமுக கவர்மெண்ட்ல வந்தும், அந்த கேஸை, அந்த ஹிஸ்டரியை மூடி மறைத்துவிட்டார்கள்.

என்ன நடக்கிறது சொல்லுங்கள்? தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார், வாய் திறவுங்கள்.

உங்களுடைய கூட்டணியில் உள்ள 'மற்றும் பலரும்' வாய் திறக்காமல் இருக்கிறார்கள். இதில கூடவா கூட்டணி, இதில கூடவா கூட்டணி வைத்துக்கொண்டு வாய் திறக்காமல் இருக்கிறீர்கள்?

எப்போதும் பெண்கள் பாதுகாப்பிற்கென்றே பிறந்த மாதிரி திமுகவும், இந்த மற்றும் பலரும் பேசுவார்கள். அத்தனை பெண்களை சீரழித்தவனை நாம தூக்கி உள்ள வச்சுட்டோம்.

இப்போது அவனைப் பற்றியும் வாய் திறக்கவில்லை. அந்த ஆளைப் பற்றியும் வாய் திறக்கல. இத்தனை வருஷமா மூடி மறைச்சு வச்சிருந்த விஷயத்தை விஜய் தோண்டி வெளியெடுத்து அவனை உள்ள தூக்கி வச்சுட்டான். அந்த அதிர்ச்சியில் வாய் திறக்காமல் இருக்கிறார்களோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை.

எல்லாம் பச்ச குழந்தைங்க சார். அவர்களுடைய வலியைப் பற்றி வந்து வெளியில பேச முடியலைன்னா, அப்புறம் என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க? இத்தனை வருஷமா என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க?

அதனால் மக்களே, வருகின்ற தேர்தலில் இவர்களுக்கும், இந்த திமுக கூட்டணி மற்றும் பலருக்கும் நீங்கள் சரியான பாடத்தை புகட்டியாக வேண்டும். நம்முடைய சின்னம்... விசில் சின்னம்..." என வாக்கு கேட்டு சென்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்