தமிழ்நாடு

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் 'விஜய்'? பாஜகவை எதிர்க்கும் ஒரே ஆயுதம்.. 3 வது அணி தேவையில்லை - MLA தாரகை விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

Muthu Lakshmi

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தவெக கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது, இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது, புதிய கூட்டணி உருவாக்கம் மற்றும் இடைத்தேர்தல் என தமிழகம் இன்னும் தேர்தல் அலையில் இருந்து மீளவில்லை. இன்று தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், அரசியல் அலை தொடர்ந்து வருகிறது. தற்போதைய தமிழக அரசியல், கூட்டணி மற்றும் ஒன்றிய அரசுடனான தவெகவின் நிலைப்பாடு ஆகியவை குறித்து காங்கிரஸ் MLA தாரகை கத்பர்ட், நமது மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசியுள்ளார்.

“திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய பின், இரு துருவங்களாக ஆன சூழ்நிலைதான் இப்போது தமிழ்நாட்டில் இருக்கு. திமுக தேசிய அளவில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கப் போறதா அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுகிறது” என்பது குறித்து MLA தாரகை கத்பர்ட் கூறுகையில்,

“இந்திய கூட்டணியில் இருந்து திமுக வெளியே போகல. அவங்க வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொல்லியிருக்கிறார்கள். மூன்றாவது அணி என்றைக்குமே இந்தியாவில் சாத்தியம் இல்லாத ஒன்று. அந்த மூன்றாவது அணி என ஒன்று தொடங்கினால், அது பாஜகவுக்குச் சாதகமாகத்தான் முடியும். அப்படி ஓட்டு பிரிந்தால், திமுக பாஜகவுக்கு சப்போர்ட் பண்ணுவதாகத்தான் அர்த்தம்” என்று தெரிவித்துள்ளார்.

முழு நேர்காணலையும் காண இங்கே கிளிக் செய்யவும்

அதையடுத்து, நெறியாளர், “கொள்கை ரீதியாக திமுக பாஜகவை வலிமையாக எதிர்க்கிறாங்க. அது உங்களுக்கும் தெரியும். தற்போது தவெக கூட்டணியில் இருக்கீங்க. அவர்கள் வலிமையாக பாஜகவை எதிர்க்கிறாங்களா? இதற்கு முன்னாடி திமுக எதிர்த்த அளவுக்கு எதிர்க்கிறாங்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தாரகை கத்பர்ட், “தவெக பாஜகவை எதிர்ப்பதால் தான், அவர்களும் வருகின்ற 15-ஆம் தேதி சென்னையில் நடக்கக்கூடிய மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சிஎம் ஒருவேளை கலந்து கொள்ளலாம். பொறுத்திருந்து பாருங்கள். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதிலும் அவங்க தெளிவாக இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் அஜெண்டாவை அவர்கள் முழுமையாக ஏற்கிறார்கள். தெளிவாக தவெக முடிவெடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

அதையடுத்து, நெறியாளர், “தவெக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, மக்கள் எதிர்ப்பை அடுத்து U-Turn எடுக்கிறார்கள் என விமர்சனம் எழுந்ததே. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், “அரசு, அமைச்சர்கள் மற்றும் CM யார் முடிவெடுத்தாலும், எண்ட் ஆஃப் தி டே, மக்கள் தான் முடிவு செய்யப் போகிறார்கள். மக்களுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம். மக்களுக்கு வேண்டும் என்றால் வேண்டும். அவ்வளவுதான். அப்படி முடிவெடுக்கிறது தவெக ஆட்சி. மக்களுக்கான நல்லாட்சியை தவெக ஆட்சி கொடுக்கிறது” என்றார்.

“கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்துட்டு இருந்தாங்க. இப்போ ஏன் அவங்க தனித்துப் போட்டியிடுறாங்கன்னு நினைக்கிறீங்க?” என்ற கேள்விக்கு, “தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று தனித்துப் போட்டியிடுகிறார்கள். அவர்கள் யாருடையோ தூண்டுதலின் பேரில் இப்படிப் பண்ணிட்டு இருக்காங்க” என்று பதிலளித்தார்.

“‘திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்’ என்று கம்யூனிஸ்ட் சொல்கிறார்களே?” என்ற கேள்விக்கு, “அதில் மாற்றுக் கருத்தும் கிடையாது. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்தான். ஏனென்றால், அதிமுகவும் திமுகவும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க நினைத்தார்கள். அவர்களால்தான் இந்தத் தேர்தல் வந்தது” என்று பதிலளித்தார்.

அரசியல் வரலாற்றில் 1967-ல் காங்கிரஸை எதிர்த்துதான் திமுக வெற்றி பெற்றது. மீண்டும் காங்கிரஸும் திமுகவும் இணைந்து கூட்டணியில் இருக்கும் நிலையில், அதிமுகவும் திமுகவும் ஏன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், “அவர்களின் கொள்கை வேறு வேறு. அப்படி கூட்டணி அமைத்தால், அது பாஜகவுக்குச் சாதகமாகத்தான் அமையும்” என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்