இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் சுணக்கம்.. ஓய்ந்ததா 'விஜய் அலை'? 3% சரிவு என்ன சொல்கிறது?

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளரையே தவெக மீண்டும் நிறுத்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர்.
By Election voting analysis
இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் சுணக்கம்.. ஓய்ந்ததா 'விஜய் அலை'? 3% சரிவு என்ன சொல்கிறது?
Published on: 
Updated on: 
2 min read

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தவெக, அதிமுக, திமுக, இடதுசாரி கட்சிகள் மற்றும் நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுத்தேர்தலை ஒப்பிடுகையில் குறைவான அளவிலேயே மக்கள் வாக்களிக்க வருவதாகத் தெரியவந்துள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,04,926 பேர் ஆண்கள், 1,08,797 பேர் பெண்கள், 65 பேர் மூன்றாம் பாலினத்தவர். வாக்களிக்க 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,07,285 பேர் ஆண்கள், 1,16,013 பேர் பெண்கள், 8 பேர் மூன்றாம் பாலினத்தவர். இங்கு 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு குறைவு.. ஓய்ந்ததா விஜய் அலை?

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலின்போது புதிய கட்சியாக களமிறங்கியிருந்த தவெகவுக்கு மக்களின் வரவேற்பு இருந்தது. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று வாக்களித்தனர். புதிய வாக்காளர்கள் மட்டுமில்லமால் அதுவரையில் வாக்களிக்காதவர்கள் கூட வாக்களித்ததைக் காண முடிந்தது.

அன்று காலை 11 மணியளவில் மதுராந்தகத்தில் 37.28% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இன்று 35.55% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. இது மக்கள் வாக்களிக்க வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

அதேபோல் தாராபுரம் தொகுதியில் பொதுத்தேர்தலின்போது காலை 11 மணியளவில் 40.89% ஆக இருந்த வாக்களிப்பு இன்று 37.28% ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து வெயில் அதிகரித்து வருவதால் வாக்குப்பதிவு குறைவாகவும், மாலையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மக்கள் வாக்களிக்க விரும்பாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அரசியல் விமர்சகர்கள், பொதுத்தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க மக்களிடையே இருந்த ஆர்வம் குறைந்துள்ளதாகக் கருதுகின்றனர்.

குறிப்பாக, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளரையே தவெக மீண்டும் நிறுத்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் கட்டாய விடுமுறை அளித்திருந்தாலும், தலைநகர் சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களில் பணியாற்றுபவர்கள் விடுமுறை இல்லாததால் வாக்களிப்பது குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும், வாக்களிக்கும் விகிதம் சுமார் 3% வரை குறைந்திருப்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. மாலையில் இந்த விழுக்காடு அதிகரிக்கும்பட்சத்தில், கடந்த தேர்தலில் இருந்த மக்களின் மனநிலை மாறியிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், ஆளும் கட்சிக்கான ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

By Election voting analysis
"தொடங்கியது இடைத்தேர்தல்.." ஐந்து முனை போட்டியில் வெல்லப்போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவு!
By Election voting analysis
சீமானுக்கு 'சிவகார்த்திகேயன்' அரசியல் அட்வைஸ்.. இடைத்தேர்தல் மேடையில் சலித்துக்கொண்ட நாதக தலைவர்!
By Election voting analysis
வேட்பாளர்களை விட.. இடைத்தேர்தல் "ரிசல்ட்டுக்கு" பதற்றத்துடன் காத்திருக்கும் "முக்கிய புள்ளிகள்".. தவெகவில் யார் தலை உருளப்போகிறதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com