தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும்,நடிகருமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாள் நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 25 ம் தேதி ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, இன்று அவரது இரண்டாம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாளையொட்டி தலைமை கழகத்தில் மருத்துவ முகாம், ரத்ததான முகாமை இன்று பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
சாலையோர வியாபாரிகளுக்கு சுயதொழில் செய்ய தள்ளுவண்டி ,அயன் இயந்திரம்,தையல் இயந்திரம், இட்லி குண்டான் ( இட்லி கடை வைப்பதற்கு ) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி வழங்கப்பட்டது,மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன.
அதே போல் ராமாபுரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி தமிழ் சங்கத்திற்கு கல்விக்காக ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட போது விஜய பிரபாகரனிடம் பவித்ரா என்ற பெண் தன்னுடைய மகள் படிப்பிற்கு கல்வி உதவி தொகை கேட்டிருந்தார், அதைத்தொடர்ந்து அவரின் படிப்பு செலவு முழுவதும் ஏற்றுக் கொள்வதாக விஜய பிரபாகரன் தெரிவித்தார். இந்த நிலையில் அவருடைய மகள் படிப்பு செலவிற்கு கல்வி உதவித் தொகையை நேற்று வழங்கினார். தொடர்ச்சியாக கடலூரில் கடந்தாண்டு கேப்டன் பிறந்தநாளுக்கு கட்டவுட் வைக்க சென்ற போது இறந்த வெங்கடேஷ் என்ற தொண்டருடைய குடும்பத்திற்கு இரண்டாவது முறையாக உதவி தொகை வழங்கப்பட்டது.
அதன் பின்னர், விஜயகாந்தின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் முரசு புத்தகத்தையும் பிரேமலதா வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் மேடையில் பேசியதாவது,
“அவரின் பிறந்த நாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் இல்லாமல் அவரின் பிறந்தநாளை கொண்டாடுவது மனதுக்கு கனமாக இருக்கிறது. என் கண் கலங்குகிறது. அவர் நிழலாக நான் வருவேன். அவருடனான நினைவுகள் என் கண்ணுக்குள் வருகிறது.
அவர் சொல்லிக்கொடுத்தப்படி நலத்திட்ட உதவிகள் எல்லாம் வழங்கப்பட்டது. அவர் பாதையில் இருந்து தவறாமல் அவர் செய்ததை போலவே எப்போதுமே தேமுதிக செய்யும். உலகம் இருக்கும் வரை கேப்டன் புகழ் இருக்கும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் அவர்.
இது அவரின் 73 வது பிறந்த நாள். அவர் இங்கேதான் இருக்கிறார். நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, புடவை, ரவிக்கை கொடுத்து ஆசிர்வதிக்க உள்ளோம். அம்மன் கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட புடவையை கொடுத்து ஒரு அம்மாவாக இருந்து அவர்களை நான் ஆசிர்வதிக்க உள்ளேன்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்
“நேற்று வரை முதல் கட்ட பயணத்தை வெற்றி கரமாக முடித்துள்ளோம். போகும் இடம் எல்லாம் மக்களிடையே அன்பும் ஆரவாரமும் கிடைத்தது.
தூய்மை பணியார் இல்லை என்றால் நாடு அசிங்கமாகி விடும். தங்களின் உயிரை பணயம் வைத்துதான் அந்த தொழிலை அவர்கள் செய்கிறார்கள். மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
ஏற்கனவே தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது நான் நேரடியாக சென்று அவர்களின் துயரில் பங்கேற்றேன். அவர்களுக்கு ஆறுதலும் சொன்னோம். பணி நிரந்தரம், பழைய ஊதியம் அந்த இரண்டு மட்டும் தான் அவர்கள் கேட்கிறார்கள்.
ஆனால் அரசு வீடு தருகிறோம், கல்வி உதவித்தொகை தருகிறோம்... காலை உணவு தருகிறோம் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் கேட்டது வேறு... ஆனால் அரசு சார்பில் அறிவித்தது வேறு... தூய்மை பணியாளர்கள் நன்றி சொல்வது போல் எல்லாம் செய்திகள் வந்தது... அவர்கள் மாயை உருவாக்கி உள்ளனர். உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரிக்கை சென்று சேரவில்லை. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு முதலமைச்சர் செவி சாய்க்க வேண்டும் என்று கேப்டனின் பிறந்தநாளில் கேட்டுகொள்கிறோம்.
இது குல தொழிலாக மாறிவிடக்கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அம்மா அப்பா செய்யும் வேலையை பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
எவ்வளவோ வரி வசூலிக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் என்ன குறைந்துவிடப் போகிறது.
கேப்டனும், எஸ்.ஏ.சந்திரசேகரும் 17 படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். விஜய் சின்ன பையனாக இருக்கும் போது இருந்தே கேப்டன் அவரை பார்த்து வந்துள்ளார. விஜய் எங்களுடைய பையன்தான். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் எப்படியோ அப்படிதான் விஜயும். ஏ.ஐ -யில் கேப்டனை பயன்படுத்த கேட்ட பொழுது சரி என்று சொன்னோம். செந்தூர பாண்டியன் படத்திலும் கேப்டன் நடித்து கொடுத்தார். விஜய்க்கு என் வாழ்த்துகள்.
கேப்டனின் வாக்குகளை பிடிக்க அவர் அப்படி சொல்கிறாரா? என்றால்... எங்களுக்கு என்று ஒரு கட்சி இருக்கிறது. எங்கள் கட்சி 20 ஆண்டு கட்சி... எதிர்க்கட்சியாகவும் இருந்து இருக்கிறோம். கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டும் தான். அவர் இடத்தை யார் நினைத்தாலும் பிடிக்க முடியாது அவர் கேப்டனின் பெயரை சொல்கிறார். கேப்டனின் வாக்குகளை அவர் எடுத்துகொள்கிறார் என்றால் மக்கள் அதை ஏற்றுகொள்ள மாட்டார்கள். கட்சி தொண்டர்களும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்
மக்களுக்கு பிரச்சனை என்றால் வேட்டியை மடித்து கட்டி முதல் ஆளாக நிரப்பவர் கேப்டன். கேப்டனை யாருடனும் ஒப்பிடக்கூடாது... அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்
டி .வி.கே தரப்பினர் விஜயகாந்தை ரீல்ஸ்களில் வெளியிடுவது குறித்த கேள்விக்கு.... எங்கள் தரப்பிலும் ஐ டி விங் தரப்பு மூலம் பதலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு வாரிசு இருக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்களை கேப்டன் உருவாக்கி இருக்கிறார். எனவே வேறு யாரும் கேப்டனை பயன்படுத்துவதை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.