vijaya prabakaran  
தமிழ்நாடு

"நீங்கள் தான் வேட்டைக்காரனாச்சே” - காவிரி நதி நீர் விவகாரத்தில் முதல்வரை விமர்சித்த விஜய பிரபாகரன்.. கரப்பான் பூச்சி கட்சிக்கு சரமாரி கேள்வி!

உண்மையான வேட்டைக்காரர் வீரப்பன் மட்டுமே என்றும் அவர் இருக்கும் வரை தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க கர்நாடகா மறுக்கவில்லை...

Mahalakshmi Somasundaram

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேமுதிக சார்பில் நேற்று ஒகேனக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கட்சியின் இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக, தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவுக்குச் சென்று காவிரி நீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், "நீங்கள் தான் வேட்டைக்காரனாச்சே... காவிரி தண்ணீருக்காக கர்நாடகாவிடம் சென்று கேளுங்கள்" என முதல்வர் விஜய்யை விமர்சித்த விஜய பிரபாகரன், “ஓடு ஓடு” மற்றும் “நான் அடிச்சா தாங்க மாட்டே” என்ற அவரது திரைப்பட வசனங்களையும் குறிப்பிட்டு காட்டமாகப் பேசினார். அதே நேரத்தில், உண்மையான வேட்டைக்காரர் வீரப்பன் மட்டுமே என்றும் அவர் இருக்கும் வரை தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க கர்நாடகா மறுக்கவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, காவிரி எந்த ஒரு மாநிலத்துக்கும் தனிப்பட்ட சொந்தமானது அல்ல என்றும், இரு மாநிலங்களுக்கும் பொதுவான நதியாக காவிரி இருப்பதால் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்றும் கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளுக்கு விஜய பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக முதல்வர் விஜய் குறித்து பேசிய அவர், "முதல்வர் விஜய் முதலில் கர்நாடகாவுக்குச் செல்ல வேண்டும். ஓகேனக்கல்லுக்கு வந்து ஏன் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை?" என கேள்வி எழுப்பினார். மேலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவுக்கு வர வேண்டாம் எனக் கூறியிருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், தனது தந்தை விஜயகாந்த் வீரப்பனை மையமாகக் கொண்ட திரைப்படத்தின் மூலம், மக்கள் மத்தியில் இருந்த அவரது பிம்பத்தை மாற்றியதாகக் குறிப்பிட்டார். தனது தந்தை போன்று மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட அரசியல் பிரச்னைகள் குறித்தும் பேசும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் என் விவசாயிகளுக்காக கர்நாடக நதி நீர் குறித்து பேசவில்லை என கேள்வி எழுப்பினர்.   விஜய பிரபாகரன், தமிழக மக்களை எளிதில் ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் மோதல் போக்கைக் கைவிட்டு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி “ஈ சாலா காவிரி நம்து” என்று கூறி உரையை முடித்தார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.