தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தற்போது வரை முன்னிலையில் இருந்து வரும் நிலையில், அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரையிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி பிரகாசமாக தெரிந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் குடும்பத்தினர் விசிலடித்து கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய்யின் தந்தை "நம்பிக்கையோடு இருக்கிறேன். வெற்றி நமதே இதுவே ஒரு தாரக மந்திரமாகிவிட்டது. அரசியலைத் தாண்டி இளைஞர்களுக்கு அது ஒரு நம்பிக்கை. முதலில் வாழ்க்கையில் உயருவோம், நம்மால் சாதிக்கமுடியும் என்ற உத்வேகம் நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அதுதான் நம்மை உழைக்கத் தூண்டும். இதை விஜய் செய்துகாட்டியிருக்கிறார். நான்தான் முதலமைச்சர் ஆகுவேன் என்று 2 வருடங்களுக்கு முன்னால் தொடங்கினார். சொல்லிவிட்டு அவர் வீட்டில் உட்காரவில்லை. இறங்கி வேலைசெய்துள்ளார். பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளார். அத்தனையையும் தாண்டி இன்று ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறார். காலையில் 3.30 மணிக்கு எழுந்து திருத்தணி கோவிலுக்கு சென்று வருகிறேன். ஓட்டு போட்ட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். நான் ஓட்டுப் போட்டேன் என் அண்ணன் வெற்றியடைந்துவிட்டார். தலைவர் வெற்றியடைந்துவிட்டார் என்று கூறவில்லை மாறாக எங்கள் அண்ணன் என்றே அவர்கள் கூறினர். தலைவனாக வரவில்லை உங்களின் தொண்டனாக வருகிறேன், உங்களின் சொந்தமாக வருகிறேன். உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன். ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க துடித்தவர் விஜய். தமிழ் மக்களோடு நாங்களும் எங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியடைகிறோம். 120க்கும் மேற்பட்ட தொகுதிகளை எதிர்பார்த்ததாக எஸ். ஏ. சந்திரசேகர் கூறினார். ஊழல்வாதிகளோடு பொங்காமல் தனித்து நின்றாள் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்யமுடியும் என்று தைரியமாக தனித்து நின்றார் விஜய்" என்று அவரின் தந்தை கூறினார்.
மேலும் செய்தியளர்களின் கேள்விகளுக்கு ஒரு தந்தையாக மட்டுமே பதிலளிப்பதாகவும், அரசியலை உள்ளே செல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். தற்போது, தவெக வேட்பாளர்கள் பலரும் தங்களது வெற்றியினை பதிவிட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தவெக தொண்டர்கள் பலரும் தங்களது வெற்றியினை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.