நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைத்துள்ளார். அதிமுக கட்சி தாவல் மற்றும் தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பல கருத்துக்கள் முன்வைத்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ‘பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவெக இருக்கிறதா? இல்லை ஆளுநர் இருப்பாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் விஸ்வநாதன் “எங்கள் அரசு பொறுப்பேற்ற பின்பு கொள்கை முடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே எடுப்பார்” என்றும் “முந்தைய அரசு பின்பற்றிய கொள்கைகளை நாங்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை” என்றும் தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை. முதலமைச்சர் விஜய் இது குறித்த முடிவுகளை எடுப்பார் என உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து “எம்எல்ஏ-க்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்கிறார்கள், ராஜினாமா செய்த பின்பு அவர்கள் விரும்பும் கட்சியில் வரும் தேர்தலில் நின்று மக்களை சந்திப்பார்கள், இந்த முறையை ஜனநாயக விரோதமாகவும், குதிரை பேரமாகவும் கருத முடியாது” என்றும் தெரிவித்தார். எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் காங்கிரஸ் MP ஜோதிமணி கருத்துக்கும், மாணிக்கம் தாகூர் கருத்துக்கும் முரண்படுகிறேன்” என்றும் “ 5 ஆண்டுகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நிலைத்து நிற்கும், முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு துணையாக இரும்பு கரத்துடன் காங்கிரஸ் கட்சி செயல்படும்” எனவும் பேசியிருந்தார்.
பல்கலைக்கழக வேந்தர் குறித்த உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தவெக கூட்டணி அரசுக்கு உள்ளேயே எழுந்திருக்கும் கருத்து மோதலாக தெரிகிறது. இது குறித்து விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல; உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் அவமதிப்பதாகும். முதலமைச்சரின் ஒப்புதலோடுதான், உயர் கல்வி அமைச்சர் இதைச் சொல்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இது குறித்த ஒரு கட்டுரையையும் வெளியிட்டுள்ளார் MP ரவிக்குமார். அதில் “ஒன்றிய பாஜக அரசு ஆளுநர்களை கருவியாக வைத்துக் கொண்டு மாநிலங்களின் உயர்கல்விச் சூழலைச் சீரழித்து வருவதாகவும் அதன் ஒரு அங்கமாக தமது வருணாசிரமக் கொள்கையை நடைமுறைப்படுத்தக்கூடிய நபர்களைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருவதக்கவும் குற்றம் சாட்டினார். மேலும் “பாஜக அல்லாத மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது என்றும் தகுதியில்லாத நபர்களைத் துணைவேந்தர்களாக நியமிப்பதற்கு அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சித்தபோது அதற்கு அப்போதிருந்த திமுக அரசு உடன்படவில்லை என்றும் தெரிவித்தார். அதை எதிர்த்து திமுக அரசு போராடி இப்படி பெற்று வந்ததை எப்படி கைவிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதில் முதலமைச்சர் ஜோசேப் விஜய் அவர்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.