சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி, தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் அமைப்பது மற்றும் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையின் கேள்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பதிலளித்தார். அவர் பேசியதாவது.. தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எங்கு நிலம் எடுத்தாலும் சிலருக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். பாதிப்பையும், இதனால் ஏற்படக்கூடிய பலனையும் கணக்கில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். சென்னையில் எங்கு தலைமைச் செயலகம் கட்டினாலும் எதிர்ப்பு வரத்தான் செய்யும். இது இயல்பானதுதான். சில இடங்களில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தூண்டிவிடலாம். எல்லாவற்றையும் அப்படிச் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை “பிரதமர் வேட்பாளர் ராகுல் என்பதற்கு, உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வர் உத்தரவாதம் தந்தாரா?” என்றும் “மோடி, பாஜக குறித்து பேரவையில் விமர்சித்தால் அவைக்குறிப்பில் இருந்து ஏன் நீக்கப்படுகிறது? எனக் கேட்டுச் சொல்லுங்கள்” என்றும் கூட்டணி குறித்து கேள்வியை எழுப்பினர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரவீன் சக்கரவர்த்தி, “செல்வப்பெருந்தகை முன்னாள் தலைவராக இருந்திருக்கலாம். இப்போது யார் அவர்? அவருடைய கருத்து எல்லாம் வேஸ்ட்” என்று கட்டமாக பதிலளித்துள்ளார். கூட்டணிக்கு பெயர் வைக்கும் போது, அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முதலமைச்சருடன் பங்கேற்றனர். இதில் எந்தப் பிரச்சினையும், குழப்பமும் இல்லை. ஆட்சி அமைக்கும் முன் எப்படி உறுதியாக இருந்ததோ, அப்படியே உறுதியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்டபோது, தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினர். தற்போது தவெக ஆட்சியில் எங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆட்சியை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தனது X தள பதிவில் பதிலடி கொடுத்து, சரமாரி கேள்விகளை அடுக்கியுள்ளார். “கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார், அறிவுஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர். வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின், அவர் இருந்த மேடையை தண்ணீர் ஊற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது. மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி. அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவுஜீவி. உங்களுடன் நீண்ட நேரம் சிரித்துப் பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா?
சரி, முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே. முதல்வர் கூட சொல்ல வேண்டாம். அந்தக் கட்சியில் முன்னணிப் பொறுப்பில் உள்ளவர்களாவது சொல்லட்டுமே. அதுவும் வேண்டாம். நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம், ‘நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான்’ என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி, அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடம் உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.
பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால், அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே. அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும்போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள். உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை. அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும். காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால், ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.
"காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாடு முதல்வர்தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்றுகொண்டு, என் தலைவர் திரு. ராகுல் காந்திதான் பிரதமர் என்று சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். உரக்கச் சொல்கிறேன்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்