தமிழ்நாடு

"யார் அனுமதி தருவாங்கனு மொதல்ல தெரிஞ்சிக்கணும்"! - அரசிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? பிரச்சாரம் தடை குறித்து விஜய்க்கு பதிலடி கொடுத்த மா.சுப்பிரமணியன்

இதில் திமுகவிற்கோ, அரசிற்கோ எந்தப் பொறுப்பும் இல்லை. அனுமதி கிடைத்த பிறகு ஏதாவது தொல்லை கொடுக்கப்பட்டதா? என்று ஆதாரத்துடன்..

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதன் பின்னணியில் திமுக அரசு இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். பெரம்பூர் பகுதியில் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை “ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட பாசிசத் தாக்குதல்” என்று விஜய் விமர்சித்துள்ளார். அதிகாரிகள் சிலரின் துணையுடன் திமுக அரசு தவெகவுக்கு தொல்லை கொடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தெளிவாக கூறியிருந்தார். "தற்போது 'கோட் ஆஃப் கான்டேக்ட்' அமலில் உள்ளது. தேர்தல் ஆணைய இணைதளத்தில் 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பித்தால் அனுமதி கிடைக்கும். 48 மணி நேரத்திற்கு முன்னால் சுவிதா (Suvidha) என்ற ஆப் மூலம் எந்த நிகழ்ச்சி நடத்தவிருக்கிறோம்?, அதை எங்கு நடத்த போகிறோம்?, எவ்வளவு பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்? என்பது போன்ற தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்தால் போதும். தற்போது யாரும் தேர்தல் ஆணையத்தை தேடி சொல்லவேண்டியது இல்லை, காவல்துறையினரை தேடி சொல்லவேண்டியது இல்லை, எந்த அரசு நிர்வாகத்திற்கும் அவர்கள் சொல்லவேண்டியது இல்லை. ஆன்லைனில் பதிவு செய்தால் 48 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு அனுமதி தானாகவே கிடைத்துவிடும். இப்படி இருக்கையில் அரசிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?". என்று அவர் பேசினார்.

மேலும்,“அனுமதி கேட்டு 48 மணி நேரத்துக்குள் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி கிடைக்கும். 20 மணி நேரம் அல்லது 18 மணி நேரத்துக்கு முன்பு விண்ணப்பித்தால் அனுமதி நிராகரிக்கப்படும். இதில் திமுகவிற்கோ, அரசிற்கோ எந்தப் பொறுப்பும் இல்லை. அனுமதி கிடைத்த பிறகு ஏதாவது தொல்லை கொடுக்கப்பட்டதா? என்று ஆதாரத்துடன் சொல்லுங்கள். அப்படி எதுவும் இல்லை” என்று அமைச்சர் வலியுறுத்தினார். இதுமட்டுமின்றி, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி குமரகுருபரன், தேவையான விண்ணப்பம் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி முறையாகச் சமர்ப்பிக்கப்படாததால், இதுவரை அனுமதி வழங்கப்படவும் இல்லை, மறுக்கப்படவும் இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், "இணையவழியில் முறையான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பின்பு காவல்துறை அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்யும், அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே நாங்கள் அனுமதி வழங்குவோம்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், தவெக தலைவர் 'X' தளத்தில், நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?. இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெகவிற்கு எதிராகச் செயல்படும் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என்று கூறியதோடு, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி! என்று தனது சமூகவலைதளப்பாக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தவெக அனுமதி கோரியிருந்த அந்த இடத்தில் 3,000 பேர் கூடுவதற்கு இடமில்லை என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.