

நடிகரும் அரசியல்வாதியுமான, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது கட்சியின் பெண் ஆதரவாளர்களுக்கு எதிராக "இழிவான" கருத்துக்களைத் தெரிவித்ததற்காக, மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர், பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாழக்கிழமை அன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தை அணுகினார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பொன்ராஜ் தவெகவை 'தற்குறிகள்' என்று விமர்சித்ததோடு, அக்கட்சியின் பெண் ஆதரவாளர்களை "விபச்சாரி கும்பல்" என்ற இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவரான விஜய், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தை அணுகி புகார் மனு ஒன்றினை வழங்கினார். அதில், அரசியல் விமர்சனத்தின் எல்லையை மீறும் நபர்கள், பெண்களை இழிவான வார்த்தைகளால் தாக்குவதற்கு ஆளும் திமுக வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டினார். திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார். தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்படப் பெண்கள் குறித்து மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாக விஜய் குற்றம் சாட்டினார். மேலும், விஜய் தனது X தளத்தில் "இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி" என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, பாமக தலைவர் அன்புமணி இதுகுறித்து, "தமிழக பெண்களை விலைமாதர்கள் என இழிவுபடுத்தும் கயவர்களை கைது செய்யாதது ஏன்?, திமுகவின் ஆதரவு காரணமா? தமிழ்நாட்டு பெண்களை தரம் தாழ்ந்து விமர்சித்த பொன்ராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது தரம் தாழ்ந்து விமர்சித்த பிறகும்கூட, பொன்ராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதா?" என்று இந்த விவகாரம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், தவெக நிர்வாகி, தமிழ்நாட்டின் பெருமைக்குரிய பெண்களை தகாத வார்த்தைகளில் இழிவுபடுத்திவிட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்கவும் மாட்டேன் என தலைக்கனத்தில் திரியும் வக்கிரம்பிடித்த பொன்ராஜின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஆதவ் அர்ஜுனா கண்டித்துள்ளார். இவரை தொடர்ந்து, பாடகி சின்மயி, தனது X தளத்தில், "அவங்களுக்கு அந்த கட்சி அரசியல்வாதியை பிடிக்கவில்லை என்றால் ஏன் அவரைப் பற்றி பேச வேண்டுமா? அவரை ஆதரிக்கும் பெண்கள் எப்படி விபச்சாரிகள் ஆகிவிடுகிறார்கள்" என்று தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து, பொன்ராஜ் தனது X தளத்தில், நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா? உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து : அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் ஆதாய அரசியல் சூதாடியா, நானா?.
எனக்கு என்புருஷனை விட விஜய்தான் பிடிக்கும் என்ற பெண்மணியை கண்டித்து திருத்தாமல், ரசித்து கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?. குப்பை கூட்டிடுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கான்னு ஒரு மாணவி பேசி பின்னர் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாரே - அதை கூட ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாயசூதாடியா, நானா?. உங்களை அரசியல் ரீதியாக நான் செய்யும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், எதற்கெடுத்தாலும் திமுக பின்னால் இறுக்கிறது என்று திமுக ஃபோபியா பிடித்து, எதைச் சொன்னால் பித்தம் தெளியும் என்று அலையும் நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?. இன்று காலையில் இருந்து இப்போது வரை நூற்றூக்கணக்கான மிரட்டல் கால்கள், சமூக வளைத்தளத்தில், வாட்ஸ்ஆப்பில் என்னையும், என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்கு தான் வெர்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா?, என்ன ஒரு இழிநிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலில் நான்கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை என்றால், இப்படியா வசை பாடுவது?. நான் பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல. எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சில நாதாரிகள் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக இருந்தாலும், 'I will call spade as spade'. எனவே எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள். உங்கள் கட்சி பெண்களுக்கு உங்கள் கட்சி ஆட்களால் இளைக்கப்படும் பாலியல் பலாத்காத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள். உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாம் கேட்ட உங்க கட்சிக்கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டு சென்றதிற்கு மன்னிப்பு கேளுங்கள். இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன். எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்." என்று தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது, இந்த விவகாரம் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அந்தப் புகாரானது, கூறப்படும் கருத்துக்களை, மாநிலத்தில் பொது விவாதமாகி, பெண்களுக்கு மரியாதை அளிப்பது தொடர்பான நேரடி கேள்விகளை முன்வைக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.