தமிழ்நாடு

“ஆதாரம் வேண்டும் என்றீர்களே.. இது போதுமா?” போட்டுடைத்த முதல்வர்!

பெண்களை குறித்து யாராவது அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசினால் 'சட்டம் தன் கடமையை செய்யும்'

Vinvizhi Leninton

3 நாட்கள் விடுமுறைகளை அடுத்து இன்று கூடிய சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தனது பதிலுரைகளை வாசித்தார். தனது பதிலுரைகளை முடித்த பின்னர், "முக்கியமான விஷயம்" என்று கூறி சிலவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.

கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை மற்றவர்கள் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக கையாளுகிறார்கள் என்பதை சிந்திக்கவேண்டும் என்று பேசினார். அரசியல் ரீதியாக எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் விமர்சித்துக்கொள்ளலாம் என்றும் மக்கள் நேரலையில் சட்டமன்றத்தை பார்ப்பதாகவும், மக்களுக்கு எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் எதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது குறித்து மக்கள் பார்த்து கொள்வார்கள் என்றும் ஆனால், அதே அரசியலுக்காக தனிப்பட்ட விதத்தில் பெண்களையோ, மக்களையோ தரம் தாழ்த்தி பேசுவது போன்றவை வேண்டாம் என்றும் இது எல்லாருக்கும் பொதுவான ஒரு வேண்டுகோள் என்று பேசினார்.

மேலும், சமீப காலமாக "ஆபாச நதி, வன்ம நதி"யாக ஓடுவதாகவும், அதனை மக்கள் பார்ப்பதாகவும் பேசினார். மேலும், பெண்கள் குறித்து அவதூறாக 'டபுள் மீனிங்'-கில் பேசுவது போன்றவற்றை மக்கள் பார்ப்பதாகவும், அவ்வாறு பேசுபவர்களுக்கு ஒன்றினை சொல்லிக்கொள்வதாக கூறிய முதல்வர், நமது வீட்டில் இருக்கிற அம்மாவாக, அக்காவாக, தங்கையாக நம்மோடு கூடவே இருப்பதும் அதே பெண்கள்தான், அதனால், இவற்றை மனதில் வைத்து பொறுப்புணர்வுடன் பேசுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். மேலும், தற்போது இந்த இடத்தில் இருக்க முக்கிய காரணம் பெண்கள்தான் என்றும் அதனால் பெண்களை குறித்து யாராவது அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசினால் 'சட்டம் தன் கடமையை செய்யும்'" என்று முதல்வர் தெரிவித்தார்.

"இதே சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு நடந்ததை அனைவரும் அறிவர்" என்று கடந்த கால நிகழ்வை நினைவூட்டினார். அரசியல் ரீதியாக எவ்வளவு கடுமையாக கருத்துகளையும் முன்வைத்து பேசலாம் என்றும் அதுதான் கருத்துரிமை என்றும், அதுதான் பேச்சுரிமை என்றும் சுட்டிக்காட்டி பேசினார் முதல்வர். மேலும், இதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 'ஆர்த்தோ சர்ஜன்' போல சட்டசபைக்குள்ளேயே "எலும்பை உடைப்பேன்" என்று பேசியதை சுட்டிக்காட்டினார்.

"இதுதான் அரசியலா?" என்றும் இதுபோன்று பேசுவதை மக்கள் பார்த்து பார்த்துதான் சட்டப்பேரவையில் அந்த பக்கத்தில் அமர்ந்திருப்பதாக முதல்வர் சுட்டிக்காட்டி பேசினார். இந்த பேச்சினால் அவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அமளியை தொடர்ந்து பேசிய முதல்வர், தான் அவர்களுக்கு 'அட்வைஸ்' வழங்க வரவில்லை என்றும், திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் "மக்கள் அவர்களுக்கு வாக்களிக்காததால் நல்ல சாவே வராதது" என்று பேசியதை சுட்டிக்காட்டி 50 - 60 வருடங்களாக அந்த மக்கள்தான் இவர்களுக்கு வாக்களித்தார்கள், அவர்களை பார்த்து இப்படி ஒரு வார்த்தை பேச எப்படி மனம் வந்தது என்று காட்டமாக பேசினார்.

"மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் ஏன் அரசியலில் இருக்கிறார்கள்?" என்ற கேள்விதான் வருவதாக திமுகவை சுட்டிக்காட்டி பேசினார். தாங்கள் பேசியது தவறென்றே தெரியாமல் 'ஆபாச நதி' போன்ற அவதூறு வார்த்தைகளை குறிப்பிட்டு கடந்த காலத்தில் இதை விட அதிகமாக பேசியதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம் என்றும் அவர் பேசினார். எதற்கெடுத்தாலும் திமுகவினர் மிசாவை பற்றி கூறுவதாகவும் அந்த மிசாவை பற்றி எல்லாருக்கும் தெரியும் என்றும் ஆவேசமாக பேசினார். மேலும், கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி கூறியதை அவையில் சுட்டிக்காட்டி பேசினார். "பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை.. போட்டு பழகிய பை" என்று குறிப்பிட்டு பேசினார்.

தவெக அரசு யாருக்கும் தனிப்பட்ட அரசாக கண்டிப்பா இருக்காது என்றும் அவையில் தெரிவித்தார். "தமிழ்நாடுதான் என் வீடு.. 8 கோடி மக்கள்தான் என் சொந்தங்கள்" என்றும் அந்த 8 கோடி பேருக்கு அடையாளமாகத்தான் இந்த அரசு இருக்கும் என்று அவர் அவையில் பேசினார். "மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்வார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்வர்" என்று எம்ஜிஆர் பாடலை குறிப்பிட்டு அதனை கொஞ்சம் மாற்றி, "மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்வோம் தமிழக மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்ளவோம்" என்று பேசினார். மேலும், 3 கோப்புகள் குறித்து கடந்த வாரம் பேசியபோது, அதை ஓப்பன் செய்யுமாறு சவால் விட்டார்கள் என்று திமுகவை குறிப்பிட்டு பேசினார். அதை ஓப்பன் பண்ணுவதற்கு முன்பு ஒரு சாம்பிள் ஒன்றினை பார்ப்போமா? என்று கூறி பேச தொடங்கினார்.

கடந்த திமுக ஆட்சிக்கு அமலாக்கத்துறைக்கு அனுப்பிய கோப்புகள் என்று கூறி முழுதாக படிக்கச் 2 - 3 நாட்கள் ஆகும் என்றும் அதனால் மேற்கோள் கட்டியவற்றை படிக்கப்போவதாக கூறி படித்தார் முதல்வர். 'சர்க்காரியா' கமிஷனை சுட்டிக்காட்டி 1970-களில் 'சத்ய நாராயண சகோதர்கள்' என்ற கம்பெனிக்கு 'வீராணம்' திட்டத்திற்கான குழாய்கள் தயாரிக்கும் டெண்டர் கொடுத்த விவகாரத்தில் 'சர்க்காரியா' கமிஷன் தமிழ் மொழிபெயர்ப்பு தொகுதி ஒன்றில் 'வீராணம் ஏரி' என்று தனி தொகுதியே இருப்பதாக சுட்டிக்கானார். அதில் டெண்டர் வேண்டும் என்றால் 2 அரை சதவீதம் கமிஷன் தரவேண்டும் என்று கலைஞரின் மருமகன் மாறன் கேட்டதாக முதல்வர் கூறினார். டெண்டர் 16 கோடிக்கும் அதிகம் என்றும் அப்படியானால் 40 லட்சம் ரூபாய் கமிஷனாக கேட்டதாக தெரிவித்தார்.

பின்னர், 2001-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் இதே 'சர்க்காரியா' கமிஷனை பற்றி பேசியிருக்கிறார்கள் என்றும் அப்போதுதான் 'சத்ய நாராயணன்' பெயரும் அவரது மருமகன் புருஷோத்தமன் பெயரும் அடிபட்டதாக முதல்வர் விஜய் பேசினார். 50 வருடத்திற்கு முன்பு நடந்ததை 25 வருடத்திற்கு முன்பு பேசியிருக்கிறார்கள் என்று தோண்டினால் இவர்களது கூத்து வெளியில் வருவதாக முதல்வர் பேசினார். மேலும், "பவளவிழா கட்சி கண்ட பொன்விழா சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன்" என்று பேசினார். புருஷோத்தமன், 1970 முதல் 1974 வரை 7 தவணைகளில் மொத்தம் 29 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாக முதல்வர் சுட்டிக்காட்டினார். முரசொலி கட்டிடம் கட்டுவதற்கு பணமாகவும், பொருளாகவும் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், கலைஞரின் மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும், இவை அனைத்தும் இந்த அறிக்கையில் இருக்கும் குற்றசாட்டு என்று முதல்வர் விஜய் தெரிவித்தார். 'சத்ய நாராயண சகோதர்கள்' கம்பெனிக்கு டெண்டரை வழங்க அன்றைய முதல்வர் மு. கருணாநிதி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டார். அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் டெண்டரை குறைத்து போட சொல்லி தலைமை பொறியியலாளர் உசேனை கட்டாயப்படுத்தியதாக முதல்வர் விஜய் சுட்டிக்காட்டினார்.

இதைப்பற்றி பேச தற்போது எதுவும் அவசியம் இல்லை என்றும் ஆனால், எங்களின் அரசியல் பாரம்பரியம் தெரியுமா? அரசியல் சீனியாரிட்டி தெரியுமா? என்று பேசுபவர்களின் சீனியரிட்டியை மக்களுக்கு காண்பிக்க வேண்டாமா? இதையெல்லாம் சொன்னால் எழுந்து ஓடினாலும் ஓடிவிடுவார்கள் என்றும் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் ஆவேசமாக பேசினார். மேலும், Mr. Clean.. Mr. Clean என்று சொல்கிறார்களே, அப்பவே அப்படி என்றால் இப்ப யோசித்து பாருங்கள் என்று அவையில் பேசினார். மேலும், பார்ட்டி ஃபண்ட் குறித்து முதல்வர் பேசியபோது ஆதாரம் கேட்டதை நினைவூட்டினார். பின்னர் மீண்டும் அமலாக்கத்துறை பற்றி பேசினார். அதில் அமலாக்கத்துறை 100 பக்க அறிக்கை ஒன்றினை கொடுத்ததாகவும் பார்ட்டி ஃபண்ட் குறித்து ஆதாரம் இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

பார்ட்டி ஃபண்ட் குறித்து ஆதாரம் பற்றி நான் என்ன சொல்வது..? விஜய் என்ன சொல்வது..? அதன் அமலாக்கத்துறையே சொல்கிறதே! என்று முதல்வர் விஜய் தெரிவித்தார். 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை பார்ட்டி ஃபண்ட் வாங்கியதாக ED கூறியதாக முதல்வர் குறிப்பிட்டார். இது தான் கிளைமஸ் என்று கூறி பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில், அதிகாரிகள் உட்பட அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர் அதில் இருப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும், அந்த ED அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக முதல்வர் கூறினார். மேலும், ரதிஷ் என்பவர் பெயர் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ரதிஷ் என்பவற்றின் உத்தரவில்தான் IAS அதிகாரியே செயல்பட்டார் என்று ED-ல் உள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார். மேலும், "யார் இந்த ரதிஷ்?" என்று கேள்வியினையும் முன்வைத்தார். மேலும் பார்ட்டி ஃபண்ட்-டானது பார் ஓனர்களிடமிருந்து கரூர், கோயம்புத்தூர் பகுதிகளில் இருந்து பெறப்பட்டதாகவும் அவர்களை "கரூர் கும்பல்" என்று அறிக்கையில் குறியிருப்பதாகவும் முதல்வர் பேசினார்.

2021-2025 வரை வாடிக்கையாளர்களிடம் பதிலுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை முறையாக பெற்றதாக ED கூறுவதாக முதல்வர் பேசினார். மேலும், எதிர்கட்சினரை நோக்கி ஆதாரம் வேண்டும் ஆதாரம் வேண்டும் என்று கேட்டதற்கு இது போதுமா? என்று முதல்வர் அவர்களை பார்த்து கேட்டார். தவறு செய்பவர்கள் 2 விதம், அதில் முதலில் உள்ளவர்கள் தவறு செய்து மாட்டிக்கொள்பவர்கள், இரண்டாவது வகை தவறு செய்வதால் மாட்டாத வகையில் தவறு செய்பவர்கள் நமது தோழர்கள் அதில் 2வது வகை என்று முதல்வர் சுட்டிக்காட்டி பேசினார். திமுக அளவிற்கு கீழே இறங்கி தாங்கள் அரசியல் செய்யப்போவதில்லை ஆனால், அரை நூற்றாண்டிற்கு முன்னாள் சென்று ஆதாரங்களை எடுத்து பேசுவோம், அதன் மூலம் அவர்களது பிம்பத்தை உடைப்போம் என்று எச்சரிக்கையாக இல்லை அன்பா.. க்யூட்டா.. சொல்லிக்கிறோம் என்று முதல்வர் பேசினார். அண்ணா, எம்ஜிஆர், NTR, விஜய் என்று தன்னை தானே குறிப்பிட்டு பேசினார். மேலும், இறைவனும், இயற்கையும், மக்களும் நம்ம பக்கத்தால் எப்பவும் இருப்பாங்க என்றும் முதல்வர் பேசினார்.

மேலும், திட்டங்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது, திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்று திமுகவினர் கூறியதாகவும் ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரத்து செய்யப்பட்ட அஇஅதிமுக அரசின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், திமுக ஆட்சியில் அரங்கேறிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், சட்ட ஒழுங்கை பற்றி பேசுவதற்கு முன்பு கண்ணாடியை ஒருமுறை திமுக திரும்பி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். மேலும், திமுகவில் இருந்துகொண்டு குற்றம் சுமத்தப்பட்டவர்களில் பலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்