தமிழ்நாடு

எல் நினோவால் தமிழகத்துக்கு என்ன நடக்கும்? கனமழை முதல் தண்ணீர் தட்டுப்பாடு வரை.. நிபுணர் குழு எச்சரிக்கை!

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிக மழை பெய்யக்கூடிய சூழல் இருப்பதாக

Muthu Lakshmi

தமிழ்நாட்டில் வரும் காலங்களில் மாறுபட்ட வானிலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எல் நினோ தாக்கம் குறித்து ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு எச்சரித்துள்ளது. குறிப்பாக, 2026-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தையும், அதன்பிறகு 2027-ம் ஆண்டு கோடையில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக எல் நினோ என்றாலே மழை குறைந்து வறட்சி ஏற்படும் என்ற கருத்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த கால வானிலை பதிவுகள் இதை உறுதி செய்யவில்லை. எல் நினோ ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில ஆண்டுகளில் அதிக மழையும், சில ஆண்டுகளில் மழைப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு எல் நினோவின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்தது. காலநிலை, நீர்வளம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை என்ன நடக்கலாம்?

ஆகஸ்ட் 29-ம் தேதி நிலவரப்படி, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 2.20 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நிபுணர் குழுவின் மதிப்பீட்டை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. இது வலுவான எல் நினோ நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. 2026-ம் ஆண்டின் இறுதி மற்றும் 2027-ம் ஆண்டின் தொடக்கத்திலும் இதன் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிக மழை பெய்யக்கூடிய சூழல் இருப்பதாக பருவகால கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தென்னிந்தியாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், நகர்ப்புற வெள்ளம், ஆற்று வெள்ளம் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழியும் நிலை போன்றவற்றுக்கு அரசு தயாராக வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஒரு பகுதியில் வெள்ளம்.. மற்றொரு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு?

தமிழ்நாடு முழுவதும் ஒரே அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதுதான் இந்த எச்சரிக்கையின் முக்கிய அம்சம். ஒரு மாவட்டத்தில் கனமழை பெய்யும் நிலையில், மற்றொரு பகுதியில் மழைப்பற்றாக்குறை ஏற்படலாம்.

இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த மழையளவு அதிகமாக இருந்தாலும், சில பகுதிகளில் நீர்த்தேக்கங்களுக்கு போதுமான நீர்வரத்து இல்லாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கனமழை பெய்யும் பகுதிகளில் கிடைக்கும் நீரை சேமிப்பதுடன், குறைவான மழை கிடைக்கக்கூடிய பகுதிகளிலும் குடிநீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் குழு வலியுறுத்தியுள்ளது.

2015-ம் ஆண்டு சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் கடந்த கால அனுபவங்களும் இதே நிலையை எடுத்துக்காட்டுகின்றன. 2015-ம் ஆண்டு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டான 2016-ல் தமிழ்நாடு வடகிழக்குப் பருவமழையில் கடுமையான மழைப்பற்றாக்குறையை சந்தித்தது. இதனால் எல் நினோவை ஒரு குறிப்பிட்ட வகையான வானிலையுடன் மட்டும் தொடர்புபடுத்த முடியாது என்பதை கடந்த கால பதிவுகள் காட்டுகின்றன.

அடுத்த கோடையில் வெப்பம் அதிகரிக்குமா?

வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகு மற்றொரு சவாலும் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2027-ம் ஆண்டு கோடையில் வெப்ப அலை மற்றும் வெப்ப அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை கருத்தில் கொண்டு அரசு முன்கூட்டியே தயாராக வேண்டும் எனக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதன் தாக்கம் குடிநீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமின்றி பொது சுகாதாரத்திலும் ஏற்படலாம். எனவே, வெள்ளத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், அடுத்த கோடைக்கான குடிநீர் மற்றும் வெப்ப மேலாண்மை திட்டங்களையும் ஒரே நேரத்தில் தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு நிபுணர் குழுவின் முக்கிய பரிந்துரை

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக உடனடி நடவடிக்கைகள், 2027-ம் ஆண்டு கோடைக்கு முன்பாக நடுத்தர கால நடவடிக்கைகள், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நீண்டகால நடவடிக்கைகள் என மூன்று கட்டங்களில் தயாராக வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்தல், நீர்வழித்தடங்களை சீரமைத்தல், வெள்ள அபாயப் பகுதிகளை அடையாளம் காணுதல், முன்னெச்சரிக்கை தகவல் அமைப்புகளை வலுப்படுத்துதல், வெப்ப அலைக்கான சுகாதாரத் தயார்நிலை உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் அடங்குகின்றன.

அதாவது, “எல் நினோ என்றால் வறட்சி” என்ற ஒரே கணக்கில் தமிழ்நாட்டின் தயார்நிலை இருக்கக்கூடாது என்பதே நிபுணர் குழுவின் முக்கிய எச்சரிக்கை. முதலில் அதிக மழை மற்றும் வெள்ளம் வரலாம்; அதன்பிறகு சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கடும் வெப்பம் ஏற்படலாம் என்பதால், இந்த மூன்று நிலைகளையும் ஒரே திட்டத்தின் கீழ் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்