

தவெக சார்பில் இடைத்தேர்தலில் ராஜினாமா செய்த மரகதம் மற்றும் சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்சிக்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு சீட் வழங்கப்படாதது குறித்து அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது MLA பதவிகளை ஒரு மாதத்திற்குள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார்கள். அதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து பலரும் விலகி, தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர். ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தவெக மட்டும் ஆட்சி அமைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். உண்மையான பரபரப்பும் அதிருப்தியும் பின்னர் தான் தவெக-வில் எழுந்தது. சமீபத்தில் கட்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாக முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. இது தவெகவின் நிர்வாகிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்புகள் கொடுப்பது ஏற்க முடியாது என்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்களுக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்து போல வந்தது தான் இடைத்தேர்தல் அறிவிப்பு. அதே தொகுதியில் அதிமுக சார்பில் வென்று பின் ராஜினாமா செய்தது வாக்காளர்களை கோபத்தில் ஆழ்த்தியது. அதிமுகவுக்கு வாக்களித்திருந்த மக்கள், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் கொத்தித்துப் போயிருந்தனர். அதே வேட்பாளர்கள் மீண்டும் வந்து, அதே பதவிக்கு வாக்கு சேகரித்ததால் மக்களின் எதிர்ப்பை மட்டுமே இதுவரை பெற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு பெரும்பான்மை கிட்டியதால், இடைத்தேர்தலில் விஜய் அலையுடன் தவெக வேட்பாளர்களாக களமிறக்கி, எளிதாக வெற்றி பெறலாம் என இருவருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதி தவெக சார்பில் போட்டியிட்டவர் கௌரி சித்ரா. இவர் 46,438 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். மேலும் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் 62,090 வாக்குகளுடன் 3ம் இடத்தை பிடித்திருந்தார். தவெக ஏன் இவர்களுக்கே வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்துள்ளது. மேலும் பிரசாரத்திற்கு போகும் இடங்களில் தொடர்ந்து மக்களின் எதிர்ப்பை மட்டுமே இரு வேட்பாளர்களும் பெற்று வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் “இந்தத் தேர்தல் இந்த தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்; இயல்பாகவும், இயற்கையாகவும் இந்த தேர்தல் வரவில்லை” என்றும் “தவெக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும்” என்றும் தொகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் “சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றும் “அதற்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். தலைமை என்ன முடிவெடுக்க போகிறது என்பது முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் அதிருப்திகள் அனைத்தையும் விஜயின் பிரச்சாரம் சரி செய்யுமா என்பதில் தான் உள்ளது தவெக-வின் வெற்றி கனவு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்