தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விஜய்.. எங்க இருக்கீங்க..!? தேவையான நேரத்தில் அமைதியாக இருக்கும் தவெக!? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

பாஜக -வை கொள்கை எதிரி என பகிரங்கமாக அறிவித்த விஜய் இதுகுறித்து இன்றுவரை ஒரு அறிக்கை ...

மாலை முரசு செய்தி குழு

2026 தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான இதுவரை பார்க்காத ஒன்று என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தான் மக்களை பெரிதும் அலைக்கழிக்கின்றன.. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. 

சின்ன ரீவைண்ட்..!

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல  காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.

அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்திதான் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும்,  இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தலைதூக்குவது கடினம் இது விஜய்க்கு நிச்சயம் பின்னடைவு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் கரூர் சம்பவம் ஆளுங்கட்சியான திமுக -வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தியது ஒழிய பாதிக்கப்பட்டவர்கள்  உட்பட யாரும் விஜய் மீது கோவத்தை வெளிப்படுத்தவில்லை. 

இந்த சூழலில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விஜய் பெரிதளவில் வெளியே வராமலே இருந்தார். சமீபத்தில் நிர்வாகிகளுடன் சிறப்பு பொதுக் குழுவையும் கூட்டியிருந்தார்.

புதுப்பொலிவுடன் தமிழக வெற்றி கழகம் 

இதற்கிடையில் அதிமுக -விலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், விஜய் கட்சியில் இணைந்தது தமிழக வெற்றி கழகத்திற்கு ஏறுமுகமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் திராவிட சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் நேற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டார். ஓரளவுக்கு தங்களின் பிரச்சனைகளில் இருந்து தவெக மீண்டுவிட்டது எனவே சொல்ல வேண்டும். 

சரியான நேரத்தில் அமைதி காக்கும் விஜய்!

அவரது அரசியல் பிரவேசம் உண்மையில் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.  விஜய் ‘work from home’ அரசியல் செய்கிறார், என பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது.  சமீபத்தில் நடந்த அஜித் குமார் லாக் அப்  மணரத்தில் விஜய் எடுத்து முன்னெடுப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டது. நேரடியாகவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பொய் ஆறுதல் சொன்னார். கட்சி சார்பிலும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு இடையில்தான் கடந்த ஜூலை 20 -ஆம் தேதி கவின் என்ற ஐ.டி ஊழியர் சுர்ஜித் என்ற இளைஞனால் வெட்டி ஆவணப்படுகொலை செய்யப்பட்டார்.

கவினும் சுர்ஜித் சகோதரியும் காதலித்து வந்துள்ளனர். தனது சகோதரி வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த ஆணை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சாதிவெறி பிடித்த சுர்ஜித் கவினின் முகத்தில் மிளகாய் பொடி தூவி வெட்டிக்கொன்றுள்ளர். 

இந்த சம்பவம் மாநிலத்தையேஉலுக்கியது. ஆளும் கட்சியான திமுக -மீதும் எதிர்ப்புகள் வலுத்தது, அதற்கு காரணம் சுர்ஜித் -ன் பெற்றோர் இருவருமே காவலர்கள் இந்த கொலை தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்படாமல் இருந்தனர். பலகட்ட அழுத்தத்திற்கு பிறகு சுர்ஜித் தந்தை மட்டும் கைது செய்யப்பட்டார், ஆனால் அவரின் தாய் இன்னமும் தலைமறைவாகவே உள்ளார்.

5 நாள் போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர், மகனை பார்த்து கதறி அழும் காட்சிகள் கண்ணை கலங்க வைத்தன. இந்த கோர சம்பவத்தை எதிர்த்து மாநிலம் முழுக்க போராட்டமும், எதிர்ப்புகளும் வலுத்தது. இன்னும் இறங்கி வந்து சொல்ல வேண்டுமென்றால், வருகிற தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து கட்சிகளும் தங்கள் தரப்பு அரசியலை செய்யவாவது போராட்டத்தை நடத்தினர். ஆனால் அம்பேத்காரையும், பெரியாரையும் தனது கொள்கை வழிகாட்டிகள் என சொல்லிக்கொள்ளும் விஜய் கவினின் சாதிய ஆணவப்படுகொலைக்கு ஒரு துண்டு அறிக்கை கூட விடவில்லை என்பது பெரும் சர்ச்சையாக மாறியது. ஆனாலும் அதற்கு தமிழக வெற்றி அக்கழகத்திலிருந்து மழுப்பலாக கூட பத்தி வரவில்லை. அந்த சமையத்தில், “அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா? இதுதான் உங்கள் கொள்கையா என பலர் கேள்வி எழுப்பினர்’ 

திருப்பரங்குன்றம் விஜய்! 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர் ராம.ரவிக்குமார் திருப்பரங்குன்றத்துக்கு வந்தார். அதேநேரத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர், இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்துக்கு வந்தனர். அப்போது, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். அதற்கும் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

மேலும் இஸ்லாமியரும் இந்துக்களும் சகோதர உணர்வுடன் பழகி வரும் அப்பகுதியில், பாஜக, ஆர்எஸ்எஸ் கலவரத்தை தூண்ட முயலுவதாக பலரும் சாடி வருகின்றனர்.

பாஜக -வை கொள்கை எதிரி என பகிரங்கமாக அறிவித்த விஜய் இதுகுறித்து இன்றுவரை ஒரு அறிக்கை கூட விடவில்லை, என்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது,

மேலும் மதுரை மாநாட்டின்போது வேட்பாளர் பட்டியலை அறிவிக்க போகிறேன் என, “உங்களுக்கு சின்ன சர்ப்ரைஸ், நம்ம கட்சியோட வேட்பளர்கள் பேர அறிவிக்க போறோம்.  நம்ம மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய்..  மதுரை மத்தி வேட்பாளர் விஜய்… மேலூர் விஜய் .. திருப்பரங்குன்றம் விஜய், உசிலம்பட்டி விஜய்.. என்னடா எல்லா தொகுதிகளிலும் என் பேரே இருக்குனு பாக்குறீங்களா?? உங்கள் சின்னம் விஜய் தான். 

உங்கள் வீட்டிலிருந்துதான் ஒரு வேட்பாளர் வருவார். நீங்க என் முகத்துக்கு ஓட்டு போடீங்கன்னா அது எனக்கு போட்ட  ஓட்டு மாதிரி..பேச்சுக்காக எல்லாம் இல்லை, நடைமுறையிலும் அப்படித்தா இருக்கும்” என பேசியிருந்தார். ஆனால் அதே திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரமே வந்துவிடும் போலிருக்கு இந்த சூழலில், விஜய் கள்ள மௌனம் சாதிப்பதாக பலரும் சாடி வருகின்றனர்.

மேலும்,  திருப்பரங்குன்றம் விஜய்..எங்க இருக்கீங்க..!? எனக்கேட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள், இதுகுறித்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கள அரசியலை விஜய் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறார் என தெரியவில்லை. நேரடியாக மக்களோடு சென்று இருப்பது, அவர்களின் வாழ்வியலை புரிந்துகொண்டு, வலியை புரிந்துகொண்டு அதற்கேற்றார் போல தான் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். இவர் அனைத்தையுமே பனையூரிலேயே செய்வர் என்றால், அரசியல் அப்படி இயங்காது. விஜய் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும். இல்லையெனில், அது அவருக்கே மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துவிடும். மேலும் விஜய் நேரடியாக மக்களை சந்திப்பதில் பெரும் சிக்கல்கள் இருந்தாலும், அவர் ஏதோ ஒருகட்டத்தில் இதனை சரிசெய்துதான் ஆக வேண்டும். ஏனெனில் சாத்தியமற்ற என்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லை அதனை விஜயும் நன்கு அறிவார். அவர் ஒரு முழு அரசியல்வாதியாக பரிணமித்து எல்லா பிரச்சனைகளுக்கும் தயக்கமின்றி பேச வேண்டும் என்றுதான் அவரின் ரசிகர்களும், மாற்றத்தை விரும்புபவர்களும் நினைக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.