கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கடந்த மார்ச் மாதம் முதல் கூடுதலாக தமிழக ஆளுநர் பொறுப்பையும் ஏற்று வந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்துகூட, அர்லேக்கர் கேரளாவுக்குச் சென்றுவிட்டதால் இந்தாண்டு நடைபெறவில்லை. இந்த நிலையில் அவரை விடுவித்து தமிழக்கத்துக்கான ஆளுநரை விரைவில் நியமிக்க டெல்லியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சரான கிரண்குமார் ரெட்டி அந்த பதவியில் அமர்த்தப்படுவார் என தெலுங்கு ஊடகங்கள் கணித்துள்ளன.
திமுக ஆட்சியில் அமர்ந்த போது ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டது அரசியல் ரீதியில் விமர்சிக்கப்பட்டது. அதுபோல கிரண்குமார் ரெட்டியின் நியமனத்திலும் அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கிரண்குமார் ரெட்டியின் தந்தை நல்லாரி அமர்நாத் ரெட்டி ஒரு காங்கிரஸ்காரர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் கேபினெட்டில் அமைச்சராகப் பணியாற்றியவர். தொடர்ந்து, கிரண்குமார் ரெட்டியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்தார்.
2009-ல் ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பிடித்து ராஜசேகர் ரெட்டி முதல்வரானார். அவர் விமான விபத்தில் இறந்துவிட, அப்போது சபாநாயகராக இருந்த கிரண்குமார் ரெட்டி ஆந்திராவின் முதல்வரானார்.
தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டபோது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். தொடர்ந்து, ''ஜெய் சமக்யாந்திரா கட்சி" எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
மீண்டும் 2023-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜாம்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தற்போது அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கிரண்குமார் ரெட்டி முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆந்திராவில் ஆர்.எஸ்.எஸ் வளர உதவியதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அசாதுதீன் ஓவைசி, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துதான் கூட்டணியிலிருந்தே வெளியேறினார்.
காங்கிரஸ்காரராக இருந்தபோதிலும் இந்துத்துவ கருத்தியல் ஆதரவாளராகவே பல இடங்களில் பார்க்கப்பட்டுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டின் முதல்வர் விஜயின் நண்பரான விஷ்ணு ரெட்டிக்கு ஒருவகையில் கிரண்குமார் ரெட்டி உறவினர் என்று கூறப்படுகிறது.
இவரை ஆளுநராக களமிறக்குவது தவெக அரசுடன் இணக்கத்தைக் கடைபிடித்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவை வளர்க்க செய்யப்பட்ட முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
எனினும் ஆளுநர் நியமனம் குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.