தமிழ்நாடு

மண்ணச்சநல்லூர் தொகுதியில்.. வெற்றி யாருக்கு? "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்

அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. திமுக 33 சதவீத வாக்குகளைப் பெறும்

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் மண்ணச்சநல்லூர் தொகுதி, நெல் விவசாயத்திற்குப் பெயர்பெற்ற ஒரு முக்கியக் களமாகும். தற்போதைய திமுக எம்எல்ஏ கதிரவன் மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கோடு இருந்தாலும், சமீபத்தில் அவர் பேசிய சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் கிட்னி விவகாரம் தொடர்பான விவாதங்கள் இந்தத் தொகுதியில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மண்ணச்சநல்லூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆராய்ந்தால், 41 முதல் 60 வயதுடையவர்கள் 36.5 சதவீதத்தோடு முதலிடத்தில் உள்ளனர். 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 19.71 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக முத்தரையர்கள் 40 சதவீதத்தோடு மிகப்பெரிய வாக்கு வங்கியாக உள்ளனர். முத்துராஜாக்கள் 13 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 12 சதவீதமும், சோழிய வெள்ளாளர்கள் (பிள்ளைமார்) 10 சதவீதமும் உள்ளனர். 80 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், முத்தரையர் சமூக வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் உச்சகட்ட சக்தியாக உள்ளன.

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக நெல் விவசாயத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து சீரான நீர்ப்பாசன வசதி இல்லாதது குறித்து விவசாயிகள் பெரும் புகார் தெரிவிக்கின்றனர். வாய்க்கால்கள் தூர்வாரப்படாதது, மின்சார மோட்டார் உதிரி பாகங்களின் விலையேற்றம் மற்றும் பயிர் பாதிப்புகள் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய விளைபொருட்களை மண்டிக்குக் கொண்டு செல்லப் போக்குவரத்து வசதி இல்லாதது மற்றும் விளைபொருட்களுக்கு முறையான விலை கிடைக்காதது போன்ற புகார்கள் மண்ணச்சநல்லூர் மக்களின் பிரதான குறைகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மண்ணச்சநல்லூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக இங்கு 58.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 54.6 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 28.9 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 36.6 சதவீதமாகத் தனது செல்வாக்கை அதிரடியாக உயர்த்தியுள்ளது. பூத் அளவில் பார்த்தால், 2021-ல் திமுக 116 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 143 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 86 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 89 பூத்களாகத் தக்கவைத்துள்ளது. சுமார் 35 பூத்கள் ஊசலாடும் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, மண்ணச்சநல்லூரில் அதிமுக 130 வாக்குச்சாவடிகளில் வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. திமுக 100 முதல் 110 வாக்குச்சாவடிகளில் மட்டுமே தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 90 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் கணிப்புப்படி, 2026-ல் அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. திமுக 33 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 26 சதவீத வாக்குகளைப் பெறும். சுமார் 2 சதவீத வெற்றி வித்தியாசத்தில் தற்போது அதிமுகவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.