"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு மிக அருகிலுள்ள பல்லாவரம் தொகுதி, தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் பகுதியாகும். தற்போதைய திமுக எம்எல்ஏ கருணாநிதி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கோடு இருந்தாலும், 2026 தேர்தலில் நிலவும் மும்முனைப் போட்டி களத்தை மாற்றியுள்ளது.
பல்லாவரம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 40.2 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 29.8 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஆதிதிராவிடர்கள் 30 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர்கள் 18 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும், யாதவர்கள் 10 சதவீதமும் உள்ளனர். 100 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை.
முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகக் குரோம்பேட்டை - பல்லாவரம் சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் முதலிடத்தில் உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் பல இடங்களில் பாதியிலேயே நிற்பதும், கீழ்க்கட்டளை உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதும் மக்களின் பெரும் புகாராகும். மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகளில் போதிய வாகன நிறுத்த வசதிகள் இல்லாதது மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சிறு தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு பல்லாவரம் மக்களின் பிரதான குறையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
பல்லாவரம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 47.5 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 53.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 33.3 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 32.2 சதவீதமாகச் சற்றே சரிந்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 135 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 139 ஆகத் தக்கவைத்துள்ளது. அதிமுக 2021-ல் 91 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 81 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 34 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.
2026 தேர்தல் கணிப்பின்படி, பல்லாவரத்தில் திமுக 125 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 115 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 90 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 33 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 28 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், கடும் போட்டியே நிலவுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.