தமிழ்நாடு

புதுச்சேரி மகுடம் யாருக்கு? ரங்கசாமி மீண்டும் வருவாரா? விஜய்யின் தவெக அள்ளப்போகும் சீட்கள் எத்தனை? அதிர வைக்கும் எக்ஸிட் போல் முடிவுகள்!

மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 முதல் 25 இடங்கள் வரை பிடித்து ஆட்சியைத் தக்கவைக்கும்

மாலை முரசு செய்தி குழு

புதுச்சேரி அரசியலில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், இந்த முறை மீண்டும் ரங்கசாமி தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக எக்ஸிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் ரங்கசாமியின் ஏஐஎன்ஆர்சி (AINRC) தலைமையிலான இந்த கூட்டணி, மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 முதல் 25 இடங்கள் வரை பிடித்து ஆட்சியைத் தக்கவைக்கும் என நான்கு முக்கிய கணிப்புகள் ஒருமித்த கருத்தைச் சொல்லியுள்ளன. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த ஒரு கணிப்பும் இந்த கூட்டணிக்கு 16 இடங்களுக்குக் குறைவாகக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஆட்சியைப் பிடிக்கத் துடித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 4 முதல் 12 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் தேர்தலிலேயே 1 முதல் 4 இடங்கள் வரை பிடித்துக் கணக்கைத் தொடங்கும் என இரண்டு கணிப்புகள் தெரிவித்துள்ளன. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தவெக, ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 'ஆக்சிஸ் மை இந்தியா' கணிப்பின்படி தவெக 2 முதல் 4 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம், புதுச்சேரியில் தனது செல்வாக்கை உயர்த்தப் போராடிய பாஜக 4 முதல் 6 இடங்கள் வரை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நிறுவனங்களின் கணிப்புகளைப் பார்த்தால், 'பிரஜா போல்' என்டிஏ கூட்டணிக்கு 19 முதல் 25 இடங்களைக் கொடுத்துள்ளது. 'காமாக்யா அனலிட்டிக்ஸ்' நிறுவனம் என்டிஏ-வுக்கு 17 முதல் 24 இடங்களும், விஜய்யின் தவெக-வுக்கு 1 முதல் 2 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. 'பீப்பிள்ஸ் பல்ஸ்' கணிப்பின்படி, வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி மீதான நற்பெயர் ஆகியவை இந்த முறை மீண்டும் என்டிஏ ஆட்சி அமைய முக்கியக் காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது. அனைத்து வயது மற்றும் பாலின மக்களிடையே ரங்கசாமிக்கான ஆதரவு வலுவாக இருப்பதாகவும் இந்தக் கணிப்பு கூறுகிறது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தலில் புதுச்சேரி மக்கள் வரலாறு காணாத வகையில் 89.87 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இது 1964-ம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த வாக்கு சதவீதம் என்பதால், இந்த முறை முடிவுகள் எப்படியிருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. கடந்த 2016-ல் காங்கிரஸ் வென்ற நிலையில், 2021-ல் என்டிஏ கூட்டணி 16 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்தது. தற்போது 2026-லும் அதே வெற்றியைத் தொடர ரங்கசாமி தரப்பு தீவிரமாக உள்ளது. இந்தத் தேர்தலில் ரங்கசாமியின் கட்சி 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

எதிர்க்க தரப்பான இந்தியா (INDIA) கூட்டணியில் காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 14 இடங்களிலும் களம் கண்டுள்ளன. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த முறை கூட்டணியில் வெறும் ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து, 3 இடங்களில் தனித்துப் போட்டியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. எக்ஸிட் போல் கணிப்புகள் சில நேரங்களில் மாறக்கூடும் என்றாலும், இப்போதைக்கு புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி மேஜிக்' வேலை செய்யும் என்றே தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.