விஜய் கட்சிக்கு இத்தனை இடங்களா? ஆடிப்போயுள்ள அரசியல் கட்சிகள்.. மெஜாரிட்டி யாருக்கு? இதோ எக்ஸிட் போல் முழு விவரம்!

இதில் நடிகர் விஜய் 10 முதல் 26 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது..
vijay tvk
vijay tvk
Published on
Updated on
2 min read

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த முதல்வர் நாற்காலியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் எகிறியுள்ளது. இதற்கிடையே வெளிவந்துள்ள பல்வேறு எக்ஸிட் போல் கணிப்புகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், பெரும்பாலான கணிப்புகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஒருமித்த கருத்தைச் சொல்லி வருகின்றன. குறைந்தது மூன்று முக்கிய நிறுவனங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு 122 முதல் 145 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணித்துள்ளன. இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் இப்போதே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆனால், இந்தத் தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்டம் காணும் அளவுக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில கணிப்புகள் சொல்கின்றன. குறிப்பாக 'என்டிடிவி - ஆக்சிஸ் மை இந்தியா' நிறுவனத்தின் கணிப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடிகர் விஜய்யின் தவெக கூட்டணி சுமார் 98 முதல் 120 இடங்கள் வரை பிடித்து ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த கணிப்பு மட்டும் உண்மையானால், திமுக ஆட்சியைத் தக்க வைப்பதில் பெரிய சிக்கல் ஏற்படும் என்றும், தமிழக அரசியலில் விஜய்யின் வரவு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதே கணிப்பில் திமுக கூட்டணிக்கு 92 முதல் 110 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், அதிமுக வெறும் 22 முதல் 23 இடங்களில் சுருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், 'ஜேவிசி' (JVC) நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவு அதிமுக தரப்பை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அந்த கணிப்பின்படி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 128 முதல் 147 இடங்களை அள்ளி ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு 75 முதல் 95 இடங்களும், விஜய்யின் தவெக கட்சிக்கு 8 முதல் 15 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான முடிவுகளைச் சொல்வதால், நிஜமான ரிசல்ட் எப்படி இருக்கும் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது. ஆனாலும், பெரும்பாலான கணிப்புகள் திமுகவுக்கு 120-க்கும் அதிகமான இடங்களைக் கொடுத்து மீண்டும் முதலமைச்சர் நாற்காலியை ஸ்டாலினுக்கே உறுதி செய்கின்றன.

Admin

'பீப்பிள்ஸ் பல்ஸ்' (Peoples Pulse) மற்றும் 'பீப்பிள்ஸ் இன்சைட்' (Peoples Insight) போன்ற நிறுவனங்கள் திமுக கூட்டணிக்கு 120 முதல் 145 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், அதிமுகவுக்கு 60 முதல் 80 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளன. அதேபோல் 'பிரஜா போல்' (Praja Poll) நிறுவனம் திமுகவுக்கு அதிகபட்சமாக 168 இடங்கள் வரை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இவர்களது கணிப்பில் நடிகர் விஜய்க்கு 1 முதல் 9 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 'பி-மார்க்' (P-Marq) மற்றும் 'மேட்ரிஸ்' (Matrize) நிறுவனங்களும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே சொல்லியிருக்கின்றன. இதில் நடிகர் விஜய் 10 முதல் 26 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

'காமாக்யா அனலிட்டிக்ஸ்' (Kamakhya Analytics) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு ஒரு சுவாரசியமான மும்முனைப் போட்டியைச் சுட்டிக்காட்டுகிறது. இதில் திமுகவுக்கு 78 முதல் 95 இடங்களும், அதிமுகவுக்கு 68 முதல் 84 இடங்களும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக, நடிகர் விஜய்யின் தவெக கூட்டணி 67 முதல் 81 இடங்கள் வரை பிடிக்கும் என்று இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. ஒருவேளை எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழல் ஏற்பட்டால், நடிகர் விஜய்யின் கட்சிதான் ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கராக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பெரும்பாலான கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக இருந்தாலும், நடிகர் விஜய்யின் வருகை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளையும் கணிசமாகப் பாதித்துள்ளது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com