"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான திருப்போரூர், கடற்கரை கிராமங்களையும் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும் உள்ளடக்கியது. கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி (விசிக) மற்றும் அதிமுக இடையே வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்த நிலையில், 2026 களம் மிகவும் அனல் பறப்பதாக உள்ளது.
திருப்போரூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆராய்ந்தால், 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.7 சதவீதத்தோடு முதலிடத்தில் உள்ளனர். 26 முதல் 40 வயதுடையவர்கள் 33.5 சதவீதமும், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 13 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக வன்னியர்கள் 33 சதவீதத்தோடு மிகப்பெரிய வாக்கு வங்கியாக உள்ளனர். ஆதிதிராவிடர்கள் 22 சதவீதமும், முதலியார்கள் 8 சதவீதமும், மீனவர்கள் 11 சதவீதமும் உள்ளனர். 76 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூக வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் உச்சகட்ட சக்தியாக உள்ளன.
முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள சுங்கச்சாவடியால் உள்ளூர் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பாதிப்புகள் முதலிடத்தில் உள்ளன. உட்புறக் கிராமங்களுக்குப் போதுமான அரசுப் பேருந்து வசதிகள் இல்லாதது மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது மக்களின் பெரும் குறையாக உள்ளது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் இந்தத் தொகுதிக்குள் வருவதால், அங்கு கூடுதல் அடிப்படை வசதிகள் மற்றும் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பது திருப்போரூர் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
திருப்போரூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இங்கு 41.8 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 46.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 40.9 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 41.7 சதவீதமாகத் தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளது. பூத் அளவில் பார்த்தால், 2021-ல் திமுக 115 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 140 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 101 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 84 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 31 பூத்கள் ஊசலாடும் ஸ்விங் நிலையில் உள்ளன.
2026 தேர்தல் கணிப்பின்படி, திருப்போரூரில் அதிமுக 110 வாக்குச்சாவடிகளில் வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. திமுக 80 வாக்குச்சாவடிகளில் மட்டுமே தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 65 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் கணிப்புப்படி, 2026-ல் அதிமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. திமுக 33 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27 சதவீத வாக்குகளைப் பெறும். சுமார் 3 சதவீத வெற்றி வித்தியாசத்தில் தற்போது அதிமுகவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.