அன்பில் மகேஷ் விவகாரத்தில் அமைதி காக்கும் உதயநிதி! CCB சோதனைக்குப் பின் எழுந்த கேள்வி AI Generated
தமிழ்நாடு

அன்பில் மகேஷ் விவகாரத்தில் அமைதி காக்கும் உதயநிதி! CCB சோதனைக்குப் பின் எழுந்த கேள்வி

திமுக தலைவர்கள் பலரும் அன்பில் மகேஷ் மீதான சோதனைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், அவரது நெருங்கிய நண்பராக அறியப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை.

மாலை முரசு செய்தி குழு

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு, அலுவலகம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நேற்று மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அன்பில் மகேஷ், கல்வித்துறை சார்ந்த சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறினார்.

இந்தச் சோதனை தமிழக வெற்றிக் கழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுகவினர் கடுமையாகக் குற்றம்சாட்டினர். "அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை" எனக் கடுமையாகச் சாடினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அவரது பதிவில், "பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு" எனக் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

அன்பில் மகேஷ் வீட்டுக்கு வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என். நேருவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்தச் சோதனை எனக் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, "அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாலும், அடக்குமுறைகளாலும் தி.மு.கழகத்தின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எல்லாம் தி.மு.கழகம் ஒருபோதும் அடிபணியாது" எனப் பதிவிட்டிருந்தார்.

திமுக தலைவர்கள் பலரும் அன்பில் மகேஷ் மீதான சோதனைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், அவரது நெருங்கிய நண்பராக அறியப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை.

இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதயநிதி அன்பில் மகேஷுக்கு குரல் கொடுக்காததற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனைக்கு காரணம் என்ன?

கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, DTCP அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், திமுக நிர்வாகி பிடி அரசகுமார் உள்ளிட்ட 3 பேர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்