திமுக ஆட்சிக் காலத்தில் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதனை களைத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம் அரசு.
இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார்.
முன்னதாக தவெக அரசைக் கண்டித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், " பா.ஜ.க. வால் நமது அரசியல் சாசனத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு எதிராக உருவாக்கப்படும் பெரும் கருத்தாயுதம் ஒன்றை நாம் இழக்கிறோம்.
இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, கடந்த 75 ஆண்டுகாள அனுபவத்திலிருந்து இந்திய குடியரசை மேலும் மேன்மையுடையதாகவும், அதிகார சமத்துவமுடையதாகவும் மாற்ற நினைக்கும் இந்தியர்கள் அனைவருக்குமான பேரிழப்பு.
கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையரை மசோதா சம்பந்தமான விவாதத்தின் போது இக்குழுவின் அறிக்கையை மக்களவையில் சமர்பித்துப் பேசினேன். இது இந்தியாவுக்கு வழிகாட்டும் முன்மொழிவுகளைக் கொண்டது." என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்,"ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார்.
அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது .
இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.)" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சட்ட ஆணையத்தின் உறுப்பினார்களையும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்:
தலைவர்: மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார்.
முழுநேர உறுப்பினர்கள்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன்.
திரு. டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., (அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.)
திரு. ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர்.
பகுதிநேர உறுப்பினர்கள்:
திரு. பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
திரு. ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்