Puducherry 
செய்தி

புதுச்சேரியில் எங்கே தங்கியுள்ளனர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? அதுவும் யார் தலைமையில்?

ஒரு தனியார் சொகுசு ரிசார்ட்டில் இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாலை முரசு செய்தி குழு

தமிழக அரசியலில் முன்பெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், அதிமுகவின் முப்பது சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென புதுச்சேரியில் முகாமிட்டுள்ளது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. புதுச்சேரி மாநிலம் பூரணாங்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் சொகுசு ரிசார்ட்டில் இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தலைமையில் அங்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது தான் இப்போது ஹாட் டாபிக்.

இந்த ரிசார்ட்டில் சி.வி.சண்முகத்துடன் முன்னாள் அமைச்சர்களான ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அருண்மொழித் தேவன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் தங்கியுள்ளனர். நேற்று வரை அதிமுகவில் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் மற்றும் தங்கமணி என மூன்று வெவ்வேறு அணிகளாகப் பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பேசப்பட்டது. ஆனால், தற்போது சி.வி.சண்முகம் தலைமையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் திரண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கேயே செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழையாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், இப்போது அதிமுகவின் இந்த 30 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்தால், விஜய்யால் மிக எளிதாகச் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும். இதனால் தான் சி.வி.சண்முகம் தரப்பு இப்போது கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது. தேசிய ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை அனைவரும் இந்த ரிசார்ட் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.