சிங்கப்பூரில் விவாகரத்து வழக்கு ஒன்றில், கணவனின் பிசினஸ் வளர்ச்சிக்குத் துணையாக இருந்த மனைவியின் தியாகத்தைப் பாராட்டி, அவருக்குச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை (33 சதவீதம்) வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.2 மில்லியன் டாலர்கள் ஆகும். நீதிபதி தேதர் சிங் கில் அளித்த தீர்ப்பில், குடும்பத்திற்காகத் தனது வேலையை விட்டுவிட்டு, வீட்டை நிர்வகித்த மனைவியின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணமான காலம் முதல் மூன்று குழந்தைகளை வளர்ப்பது, அவர்களது படிப்பு மற்றும் வீட்டு வேலைகளைக் கவனிப்பது எனப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதுடன், கணவனின் நிறுவனத்திலும் நிர்வாகப் பணிகளை அந்தப் பெண் கவனித்து வந்துள்ளார்.
இந்தத் தம்பதியினர் 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 2023-ஆம் ஆண்டு விவாகரத்து கோரி அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற விசாரணையில், தம்பதியினரின் மொத்தச் சொத்து மதிப்பில் 5.9 சதவீதம் அல்லது 400,000 டாலர்களை மட்டுமே அந்தப் பெண் நேரடியாகச் சம்பாதித்து வழங்கியிருந்தார். கணவர் சுமார் 6.4 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தார். இருப்பினும், கணவர் தனது பிசினஸில் முழு கவனத்தைச் செலுத்த அந்தப் பெண்ணின் வீட்டுப் பொறுப்புகளும், நிர்வாக உதவியும் தான் முக்கியக் காரணமாக இருந்ததாக நீதிமன்றம் கருதியது. இதைக் கருத்தில் கொண்டே, 33 சதவீத சொத்து அந்தப் பெண்ணுக்கு உரித்தானது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
வழக்கின் போது கணவர் தனது சொத்து விவரங்களை மறைக்க முயன்றது நீதிமன்றத்திற்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. விவாகரத்து தொடங்குவதற்கு முன்பே சில நிதிப் பரிவர்த்தனைகளைத் தனது பெற்றோருக்குக் கடன் திருப்பிச் செலுத்துவது போல அவர் காட்டியிருந்தார். இது தவறான செயல் என்று சாடிய நீதிபதி, வழக்கைத் தேவையற்ற வகையில் இழுத்தடித்ததற்காக அந்த நபர் தனது முன்னாள் மனைவிக்கு 5,000 டாலர் செலவுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் அனைத்து நிதி விவரங்களையும் நேர்மையாகவும் முழுமையாகவும் சமர்ப்பிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றும், மறைக்க முயலும் செயல்கள் தண்டனைக்குரியது என்றும் நீதிபதி எச்சரித்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில், தம்பதியினருக்குக் கூட்டு உரிமம் (joint custody) வழங்கப்பட்டது. கணவர் தனது வேலையில் நெகிழ்வுத்தன்மையுடனும், வீட்டில் உதவியாளர்கள் மற்றும் குழந்தைகளின் தாத்தா-பாட்டி ஆதரவுடனும் குழந்தைகளைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதால், குழந்தைகளுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு உரிமையை (care and control) தந்தைக்கே வழங்க நீதிபதி அனுமதித்தார். அதே நேரத்தில், தாயின் பங்கு குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பதால், அந்தப் பெண் தனது குழந்தைகளைத் தொடர்ந்து சந்தித்துப் பேசவும், அவர்களுடன் நேரம் செலவிடவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இல்லத்தரசிகளின் பங்களிப்பிற்கும், குடும்ப அமைப்பிற்கும் சிங்கப்பூர் நீதிமன்றம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.