ஆஸ்கார் அகாடமி விருது, ஆண்டுதோறும் திரைப்படத் துறையில் சாதனையாளர்களை அங்கீகரிக்க வழங்கப்படும் விருது. இந்த விருதுகள் முதன்முதலில் 1929 இல் வழங்கப்பட்டன. மேலும், வெற்றியாளர்களுக்கு ஆஸ்கார் என்று பொதுவாக அழைக்கப்படும், தங்க முலாம் பூசப்பட்ட சிலை வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விருதாக பார்க்கப்படுகிறது. ஆஸ்கர், 1929 ஆம் ஆண்டு முதல் வரலாற்றின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களின் அலமாரிகளில் இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த விருதினை கறுப்பினத்தவர்களுக்கு பெரிதாக வழங்கப்படவில்லை. வெள்ளையர்களே அதில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
அந்த வகையில் இதுவரை ஆஸ்கரை தனது கைகளில் ஏந்திய, கறுப்பினத்தவர்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1929-ல் அகாடமி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டதிலிருந்து, கறுப்பின நடிகைகள் மற்றும் நடிகர்களின் நடிப்பிற்காக சிலருக்கு மட்டுமே விருது அளிக்கப்பட்டுள்ளது. இதில் மிகச் சமீபத்தில் மைக்கேல் பி. ஜோர்டானுக்கும், சின்னர்ஸ் (Sinners) திரைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது, முதன்முதலில் விருதினை வாங்கியது யார்?. இது ஒரு நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது.
ஹாட்டி மெக்டேனியல் என்ற பெண்தான் ஆஸ்கார் விருது வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார், அவர் 1939 ஆம் ஆண்டு வெளியான 'கோன் வித் த விண்ட்' (Gone with the Wind) என்ற திரைப்படத்தில் 'மாமி'
என்ற கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார். மேலும், இவர் ஒரு சிறந்த அமெரிக்க நடிகை, பாடகி மற்றும் நகைச்சுவை நடிகை. இவர் ஹாலிவுட்டில் பல தடைகளை உடைத்து முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
அதன் பின்பு, 1963 'லில்லீஸ் ஆஃப் தி ஃபீல்ட்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆண் ஆப்பிரிக்க-அமெரிக்கர் மற்றும் முதல் பஹாமியர் என்ற பெருமையை சிட்னி போய்ட்டியர் பெற்றார். போய்ட்டியர் தனது 37-வது வயதில் சிறந்த நடிகர் பிரிவில் விருதை வென்ற மிக இளம் நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். ஆஸ்கர் விருதை வென்ற வரலாற்றில் மூன்றாவது கறுப்பினக் கலைஞர் கோசெட் ஆவார். மேலும், ஒரு கொடூரமான ராணுவப் பயிற்சி சார்ஜென்ட் பாத்திரத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகர் பிரிவில் இந்த விருதை வென்றார். இதுமட்டுமின்றி இவர் ஒரு திறமையான எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் விளங்கினார். திரைக்கு பின்னால், அவர் மற்றவர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்த ஒரு சமூக ஆர்வலர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளராகவும் இருந்தார்.
டென்சல் வாஷிங்டன் இருமுறை ஆஸ்கார் விருது வென்ற புகழ்பெற்ற அமெரிக்க நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.இவர் 'கிளோரி' (1989), 'டிரெய்னிங் டே' (2001) ஆகிய படங்களுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் ஆழமாகன நடிப்பு, அதிரடி த்ரில்லர்கள் மற்றும் முக்கிய வரலாற்று கதாபாத்திரங்களில் நடித்து, உலகளவில் மிகவும் தெரியப்பட்ட நடிகர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
1990ல் 'கோஸ்ட்' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற இரண்டாவது ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி என்ற பெருமையையும், இரண்டு முறை நடிப்பிற்காக பரிந்துரைகளைப் பெற்ற முதல் கறுப்பின அமெரிக்கர் என்ற பெருமையையும் வூப்பி கோல்ட்பர்க் பெற்றார். இதுமட்டுமின்றி, இவர் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் போன்றவற்றிலும் தனது பங்கினை ஆற்றியுள்ளார். கலைத்துறையின் உயரிய விருதுகளான எமி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி (EGOT) ஆகிய நான்கையும் வென்ற வெகு சிலரில் இவரும் ஒருவர்.
1996ல் கியூபா கூடிங் ஜூனியர் தனது 29 வயதில் ஆஸ்கர் விருதை வென்ற இளம் கறுப்பின நடிகர் என்ற பெயரினை பெற்றார். 'ஜெர்ரி மாகுவேர்' திரைப்படத்தில் தனது துணைப் பாத்திரத்திற்காக கூடிங் ஆஸ்கர் விருதை வென்றார்.
2001ல் டென்செல் வாஷிங்டனும், ஹாலே பெர்ரியும் ஒரே ஆண்டில் சிறந்த முன்னணி கதாபாத்திரத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் இரண்டு கறுப்பின நடிகர்கள் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினர். டென்சல் வாஷிங்டன் 'டிரெய்னிங் டே' திரைப்படத்தில் தனது முன்னணி கதாபாத்திரத்திற்காகவும், ஹாலே பெர்ரி 'மான்ஸ்டர்ஸ் பால்' திரைப்படத்தில் தனது முன்னணி கதாபாத்திரத்திற்காகவும் விருதுகளை வென்றனர். மேலும், சிறந்த நடிகை பிரிவில் விருது வென்ற முதல் கறுப்பின நடிகை என்ற பெருமையையும் ஹாலே பெர்ரி பெற்றார்.
2004ல் ஆண்டில், மோர்கன் ஃப்ரீமேன் 67 வயதில் ஆஸ்கர் விருதை வென்ற மிக வயதான கறுப்பின நடிகர். 'மில்லியன் டாலர் பேபி' திரைப்படத்தில் தனது துணை கதாபாத்திரத்திற்காக ஃப்ரீமேன் ஆஸ்கர் விருதை வென்றார்.
2006ல் 'தி லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லாண்ட்' படத்திற்காக ஃபாரஸ்ட் விட்டேக்கர், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். மேலும், 'ட்ரீம்கர்ள்ஸ் ' படத்தில் தனது துணைப் பாத்திரத்திற்காக ஜெனிஃபர் ஹட்சன் 25 வயதில் ஆஸ்கர் விருதை வென்ற மிக இளம் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆனார். மேலும் இந்த படத்திற்காக இவர் அவர் உடல் எடையை அதிகரித்து, ஸ்வாகிலி மொழியைக் கற்றுக்கொண்டு மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார்.
2009ல் 'பிரெஷியஸ்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்ததற்காக மோனிக் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். 2011ல் 'தி ஹெல்ப்' திரைப்படத்தில் நடித்ததற்காக ஆக்டேவியா ஸ்பென்சர் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். 2013ல் ஆஸ்கர் விருதுப் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, ஆஸ்கரை வென்றார் லூபிடா நியாங்கோ. கென்ய நடிகையான இவர் தனது முதல் படத்திலேயே, மனதை உலுக்கும் '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' என்ற படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்றார். 2016ல், ஒரே ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் கறுப்பின நடிகர்கள் என்ற பெருமையை மஹர்ஷலா அலியும், வயோலா டேவிஸும் பெற்றனர். டேவிஸ் 'ஃபென்சஸ் ' திரைப்படத்தில் நடித்ததற்காகவும், அலி 'மூன்லைட்' திரைப்படத்தில் நடித்ததற்காகவும் இவ்விருதை வென்றனர். அலி, ஆஸ்கார் வென்ற முதல் முஸ்லிம் நடிகர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார். மேலும், வயோலா டேவிஸ் ஆஸ்கார் விருதுக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்ட முதல் கறுப்பின நடிகை என்ற பெருமையை பெற்றவர்.
2018ல் ஒரே பிரிவில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் கறுப்பின நடிகர் என்ற பெருமையை அலி மீண்டும் பெற்றார். சர்ச்சைக்குரிய 'கிரீன் புக்' திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகர் பிரிவில் அலி விருதை வென்றார். 'இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்' (If Beale Street Could Talk) திரைப்படத்தில் நடித்ததற்காக ரெஜினா கிங் சிறந்த துணை நடிகை பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இதன் மூலம், துணைப் பிரிவுகளில் கறுப்பின நடிகர்கள் விருது வென்றது அதுவே இரண்டாவது முறையாகும். மேலும், 2019ல் 'ஸ்பைடர்-மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ்' திரைப்படத்தின் இணை இயக்குநராக பீட்டர் ராம்சேவும் வரலாறு படைத்தார் . சிறந்த அனிமேஷன் திரைப்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு, விருது வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்ற பெருமையை ராம்சே பெற்றார்.
டேனியல் கலுயாவுக்கு 'ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா' (Judas and the Black Messiah) திரைப்படத்தில் நடித்ததற்காக, 2021ம் ஆண்டு ஆம் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். அரியானா டிபோஸ் 2021 ஆம் ஆண்டு வெளியான 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' (West Side Story) என்ற திரைப்படத்தில் 'அனிதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, 2022 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றார். இந்த விருதை வென்ற முதல் வெளிப்படையான 'குவீர்' (Queer) மற்றும் ஆஃப்ரோ-லத்தீன் நடிகை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். மேலும் சினிமாவில் நடிப்பதை தாண்டி ஆடைவடிவமைப்பிலும் தங்களது கொடிகளை பறக்கவிட்டுள்ளனர். புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரூத் ஈ. கார்ட்டர், 'பிளாக் பேந்தர்' திரைப்படத் தொடருக்காக சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். 'பிளாக் பேந்தர்' (2018) படத்திற்காக இந்தப் பிரிவில் வென்ற முதல் கறுப்பின நபர் என்ற பெருமையையும், 'பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபாரெவர்' (2022) படத்திற்காக ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
'தி ஹோல்டோவர்ஸ்' திரைப்படத்தில் மேரி லாம்ப் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, டா'வின் ஜாய் ராண்டால்ஃப் 2024ல் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். இவர் இந்த ஆஸ்கர் விருது வெற்றிக்கு முன்பே 'கோல்டன் குளோப்' மற்றும் 'பாஃப்டா' உட்பட பல விருதுகளை இவரின் நடிப்பு அவருக்கு பெற்றுத்தந்தது. 97வது அகாடமி விருது விழாவில் (2025), சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் கறுப்பின மனிதர் என்ற பெருமையை 'பால் டாஸ்வெல்' பெற்றார். இதற்கு முன்னர், அவர் 'தி விஸ் லைவ்' நிகழ்ச்சிக்காக எம்மி விருதையும், 'ஹாமில்டன்' நாடகத்திற்காக டோனி விருதையும் வென்றுள்ளார். தற்போது மார்ச் மாதம் 2026-ல் நடைபெற்ற 98-வது அகாடமி விருது விழாவில், 'சின்னர்ஸ்' திரைப்படத்தில் நடித்ததற்காக மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
இந்த கௌரவ விருதினை பெறுவதில் வெள்ளையர்களே அதிக அதிகம் செலுத்திவந்தனர். அந்த நிலையில் தங்களுக்கென்ற ஒரு தனி முத்திரையை பதித்து, பாதை வகுத்து செல்கின்றனர் கறுப்பினத்தவர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.