air canada flight crash  
உலகம்

ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..! கதறிய ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் - ரன்வேயில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய ஏர் கனடா விமானம்!

அதிர்ஷ்டவசமாகப் பயணிகளுக்குப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன...

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லா கார்டியா விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவில் ஒரு பயங்கரமான விபத்து நடந்துள்ளது. கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து சுமார் 100 பயணிகளுடன் வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கிய போது ரன்வேயில் இருந்த ஒரு தீயணைப்பு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து நடந்த நேரத்தில் விமான நிலையத்தில் பெரும் பதற்றம் நிலவியது. விமானம் தரை இறங்கி டாக்ஸிவே நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த தீயணைப்பு வாகனம் மீது மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து நடப்பதற்குச் சில நொடிகள் முன்பாக, ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் டவரில் இருந்த அதிகாரிகள் அந்த வாகனத்தைக் கவனித்துள்ளனர். உடனடியாக அந்த வாகனத்தை ஓட்டிய டிரைவருக்கு "ட்ரக் 1 நில்லுங்கள்.. நில்லுங்கள்.. நில்லுங்கள்.." (Stop, stop, stop) என்று ரேடியோ மூலம் மிக சத்தமாகக் கத்தி எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி விமானத்தின் முன்பகுதி வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த மோதலில் விமானத்தின் மூக்குப் பகுதி (Nose section) பலத்த சேதமடைந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த நான்கு வீரர்கள் மிக மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், விமானத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நடந்த உடனே பயணிகள் அனைவரும் அவசரக்கால வழிகள் வழியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாகப் பயணிகளுக்குப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

விபத்தைத் தொடர்ந்து லா கார்டியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கிருந்து புறப்பட வேண்டிய மற்றும் அங்கு வந்து சேர வேண்டிய அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே தவிக்கும் சூழல் உருவானது. அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து ஆணையம் (FAA) இந்த விபத்து குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டவர் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தீயணைப்பு வாகனம் ஏன் ரன்வேக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் சர்வதேச விமானப் போக்குவரத்து வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.